மதுரை : தமிழக அரசின் மருத்துவமனையில் குழந்தையின் நாக்கிற்கு பதிலாக, அந்தரங்க உறுப்பில் மருத்துவர்கள் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்ததாக, குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனையின் முதல்வர் ரத்தினவேல் தெரிவித்துள்ளதாவது, “அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களில் குழந்தையில் வாயிலிருந்து மிகப் பெரிய கட்டி ஒன்று அகற்றப்பட்டது.
குழந்தைக்கு தற்போது ஒரு வயதாகிறது. இந்த குழந்தைக்கு குழந்தைக்கு நாக்கிலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்காக குழந்தைக்கு மயக்கம் மருந்து கொடுக்கப்பட்டு, நீர்வழிப் பாதையில் ஒரு சந்தேகம் இருந்ததால், அங்கும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அது ஒரு சிறிய அறுவை சிகிச்சை தான். அதனை மருத்துவர்கள் திறம்பட செய்துள்ளனர். குழந்தைக்கு மறுபடியும் மயக்கம் மருந்து கொடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்த மருத்துவர்கள், ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சைகளையும் மருத்துவர்கள் செய்துள்ளனர்.
தற்போது குழந்தை மிக நன்றாக உள்ளது. 100 சதவீதம் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டிய காரணத்தினால், குழந்தையின் தந்தையிடம் சொல்வதற்கு காலதாமதம் ஆகிவிட்டது.
இதனை குழந்தையின் தந்தை தவறாக புரிந்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த குழந்தை மிகவும் நன்றாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.