11 ஆண்டுகளுக்குப்பின் துப்பு துலங்கியது மனைவியை கொன்று புதைத்த ரவுடி உள்பட 4 பேர் கைது: பரோலில் வந்து தீர்த்துக்கட்டிய கொடூரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பரோலில் வந்து மனைவியை கொன்று புதைத்த ரவுடி கணவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பிரபல தாதா  கருணா.  ஆயுள் தண்டனை கைதியான இவர், சிறையில் உள்ளார். இவரது தம்பி பாஸ்கர் (48). இவரும் ஒரு கொலை வழக்கில் 2009ல் கைதாகி  தண்டனை பெற்று வந்த நிலையில், கடந்த 2016ல் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே, பாஸ்கரின் மனைவி எழிலரசி, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார்.

அவரை உறவினர்கள்  பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. போலீசார் வழக்குப்பதிந்து எழிலரசியை தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றி கடந்த 11 ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் முதலியார்பேட்டை உழந்தை ஏரியில் எலும்புக்கூட்டை கடந்த சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் வீசியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில், எலும்புக் கூட்டை வீசியது ரவுடி பாஸ்கர் என ெதரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

சிறையில் இருந்த பாஸ்கருக்கு, மனைவி எழிலரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். கடந்த 2013ம்ல் பாஸ்கர், பரோலில் வெளியே வந்தார். அப்போது மனைவி எழிலரசி, கிருமாம்பாக்கத்தில் உள்ள தங்கை வீட்டில் இருந்தார். அங்கு தனது கூட்டாளிகளான மனோகர், சரவணன் என்ற கருப்பு சரவணன், வேல்முருகன் என்ற தடி வேலு ஆகியோருடன் பாஸ்கர் சென்று எழிலரசியை காரில் ஏற்றி வந்துள்ளார். காரிலேயே சேலையினால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், உழந்தை ஏரி அருகே தயாராக தோண்டி வைத்திருந்த குழியில் சடலத்தை புதைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக உழந்தை ஏரியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிக்காக, அங்கு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்த பாஸ்கர், பள்ளம் தோண்டினால் எலும்புக்கூடு கிடைத்து மாட்டிக் கொள்வோம் என பீதி அடைந்தார். இதனால் எழிலரசியின் சடலம் புதைத்த இடத்துக்கு சென்று, எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து, உழந்தை ஏரியில் தூக்கி எறிந்துள்ளார். ஆனால் எலும்புக்கூட்டின் ஒருசில பகுதிகளை மட்டும் அவசரத்தில் எடுத்து தூக்கி எறிந்துள்ளார். மீதம் உள்ளவற்றை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து அப்புறப்படுத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்குள்ளாக போலீசில் சிக்கிக் கொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாஸ்கர், அவரது கூட்டாளிகள் உட்பட 4 பேரையும் முதலியார்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.