ஓய்வு முடிவை அறிவித்தாரா தினேஷ் கார்த்திக்..? இன்ஸ்டாகிராம் பதிவால் குழம்பிய ரசிகர்கள்

சென்னை,

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பினிஷராக விளையாடியவர் தினேஷ் கார்த்திக். 2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெற்றார்.

அதுவும் டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இவர் பார்க்கப்பட்டார். இதன் காரணமாகவே டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். டி20 உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்த பின்னர் தினேஷ் கார்த்திற்கு இந்திய அணியின் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி கூறி டோனியை போலவே வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்துள்ளது. எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாரா என்ற ரசிகர்கள் குழம்பியுள்ளனர். சில நாட்களுக்கு முன் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. தினேஷ் கார்த்திக் இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.