மலேஷியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவி ஏற்பு| Dinamalar

கோலாலம்பூர், நீண்ட இழுபறிக்கு பின், மலேஷியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் நேற்று பதவி ஏற்றார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பார்லிமென்டுக்கு கடந்த 19ல் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 222 இடங்களில் ஆட்சி அமைக்க, 112 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பார்லி அமைந்தது.

மக்கள் நீதி கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பகதான் ஹரப்பான் கூட்டணி 82 இடங்களை வென்றது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பெரிகதான் தேசிய கூட்டணி 72 இடங்களை வென்றது.

இதனால் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் மலேஷிய அரசியலில் கடந்த 5 நாட்களாக குழப்பம் நிலவியது.

இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மலேஷிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, எம்.பி.,க்களை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார்.

மலேஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக நீண்ட காலம் பதவி வகித்த அன்வர் இப்ராஹிமிற்கு அதிக எம்.பி.,க்களின் ஆதரவு இருந்ததை அடுத்து அவரை மலேஷியாவின் பிரதமராக மன்னர் நியமித்தார்.

இந்நிலையில் மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் எளிமையான முறையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் மலேஷியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.