'இணைந்து நடந்தால் வலிமை அதிகம்..' – இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா  

இந்தூர்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி இணைந்து கொண்டார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டமர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மஹாராச்டிரா மாநிலங்களில் யாத்திரையை முடித்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா இணைந்து கொண்டார். அவருடன் அவரது கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைஹானும் இணைந்து கொண்டனர். இன்று யாத்திரையின் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்ட வீரரும் பழங்குடியின தலைவருமான தன்தியாபீ நினைவிடத்திற்கு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார்கோன் செல்கின்றனர். ராகுல், பிரியங்கா நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைந்து நடக்கும்போது வலிமை அதிகம் என்று பதிவிட்டுள்ளது.


— Congress (@INCIndia) November 24, 2022

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி பழங்குடியினத் தலைவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர்களை நினைவு கூர்ந்து வருகிறார். அண்மையில் மகாராஷ்டிராவில் பிர்ஸா முண்டாவை நினைவுகூர்ந்து சிறப்பு உரையாற்றினார். அப்போது சாவர்க்கர் பற்றி அவரது பேசிய கருத்துகளால் சர்ச்சைகள் உருவானதும் குறிப்பிடத்தக்கது. செல்லுமிடமெல்லாம் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களை ராகுல் நினைவுகூர்ந்து வரும் நிலையில், பாஜகவும் ஜன் ஜாதிய கவுரவ் யாத்ரா என்ற பெயரில் பழங்குடியின தலைவர்களை பெருமைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று தன்தியாபீ பிறப்பிடத்தில் இருந்து நேற்று முதல்வர் சிவ்ராஜ் சவுகான் தலைமையில் பேரணி நடைபெற்றது.

முன்னதாக நேற்று ம.பி.யில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, ம.பி.யில் கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது என்று குற்றஞ்சாட்டினார். மத்தியில் உள்ள பாஜக ஆட்சியின் கீழ் ஜனநாயக அமைப்புகளும் சிறைப்பட்டுள்ளன. மக்களவை, தேர்தல் ஜனநாயகம், ஊடகம் என எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லா அமைப்புகளைய்யும் ஆர்எஸ்எஸ் / பாஜக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதனாலேயே சாலையில் இறங்கி யாத்திரை மேற்கொண்டு மக்களைத் தழுவி, விவசாயிகளின் குரல் கேட்டு, தொழிலாளர்கள் பிரச்சினைகளை விசாரித்து, சிறு வணிகர்கள் மனம் அறிந்து செல்கிறேன் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.