தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில் மதுரையில் நாளை (நவம்பர் 25 ஆம் தேதி) தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் முக்கிய துறைகளைச் சாா்ந்த மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெறலாம். நாளை காலை 10 மணிக்கு மதுரை மாவட்டம் கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.