குறைகிறது சுங்கச்சாவடி கட்டணம் – அமைச்சர் எ.வ.வேலு தகவல்

வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பயிற்சி பணிமனை கட்டுமானப் பணிகள் ரூ.3.73 கோடியில் நடைபெற்றுவருகிறது. இதனை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று  ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்க வசதியாக 69 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளேன்.

வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் ஐடிஐ 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 12 தொழிற்பிரிவுகள் உள்ளன. புதிதாக இரண்டு தொழிற் பிரிவுகள் கொண்டு வர வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் கிராம சாலைகளை மாநில நெடுஞ்சாலை தரத்துக்கு இணையாக தரம் உயர்த்த ரூ.2,200 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் டெண்டர் பணி முறைகேடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பொதுமக்கள் பாராட்டும் அளவுக்கு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதை பொறுக்க முடியாமல் அவர் பழைய பல்லவியை பாடியுள்ளார். கரூர் டிவிஷனில் பணி முடியும் முன்பே அதற்கான தொகை முழுவதும் ஒப்பந்ததாரருக்கு அளிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியானது. இதுகுறித்து நான் உடனடியாக விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்தேன்.

60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்க முறைப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுகுறித்து நாங்கள் ஆய்வு நடத்தி அறிக்கையும் அளித்துள்ளோம். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் மூலம் கடிதமும் எழுதப்பட்டது. இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்த பதிலில் சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். வேலூர் சுற்றுச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதனை திமுக ஆட்சியில் விரைவுப்படுத்தி உள்ளோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.