நாகப்பட்டினம்: குற்றப்பத்திரிகையில் இருந்து பெயரை நீக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் எஸ்ஐக்கு நாகப்பட்டினம் சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது. நாகப்பட்டினம் அருகே கீழையூரை சேர்ந்தவர் பிரபு. இவரது உறவினருக்கும், வீட்டு அருகில் வசிப்பவருக்கும் இடையே கடந்த 2011ல் வேலி அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக கீழையூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் புகார்தாரரின் உறவினர் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி பிரபுவிடம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் (56) கேட்டுள்ளார். இதுதொடர்பாக பிரபு கொடுத்த புகாரின் பேரில் நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து சிவானந்தத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகை மாவட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி கார்த்திகா விசாரித்து, சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் சிவானந்தத்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.