கடந்த இரண்டு கிரிக்கட் போட்டிகளிலும் தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாமிக கருணாரத்ன கிரிக்கட் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் அவரை தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்காமை தொடர்பில் கிரிக்கட் தேர்வுக்குழுவிடம் எழுத்துமூல விளக்கமொன்றை கோருமாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இலங்கை கிரிக்கட் அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் போது மதசார் குழுவொன்றுக்கு சொந்தமான வீரர்களை மாத்திரம் தேர்ந்தெடுப்பதாக ஒரு கருத்துக் காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் திறமைகளை வெளிக்காட்டிய கிரிக்கட் வீரர் சாமிக கருணாரத்னவைத் தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்காமை குறித்த மதக் கொள்கைக்கு இணங்காமையே காரணம் என ஒரு கருத்து இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்கவின் தலைமையில் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையில் வெளிநாடு சென்ற அதிகாரிகள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வசதிகளுடனும் ஒரு நாளைக்கு 800 டொலர் நிதி ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் அல்லாத தரப்பினரும் இந்த வசதியின் கீழ் சுற்றுலாவில் கலந்துகொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
- தேசிய கிரிக்கட் அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போது மதசார் குழுவொன்றின் செல்வாக்குக் காணப்படுகின்றதா?
- கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு அனைத்து வசதிகளுடனும் ஒரு நாளைக்கு 800 டொலர் வழங்கப்பட்டுள்ளது
- பெல்வூட்டை, ஹொலிவூட் மற்றும் பொலிவூட் நிலைமைக்கு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
அதேபோன்று, T20, T10 மற்றும் LPL போட்டிகளை மேற்கொள்ளும் போது நிதிப் பயன்பாடு தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தலொன்று விளையாட்டு அமைச்சின் தலையீட்டில் நடைபெற வேண்டும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
பெல்வூட் நுண்கலைக் கல்லூரியை பெல்வூட் ஈஸ்தடிக் அகடமியாக NVQ 6 சர்வதேச அங்கீகாரத்துடன் சான்றிதழ் வழங்க அபிவிருத்தி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்பொழுது காணப்படும் பாடங்களுக்கு மேலதிகமாக நடிப்பு, மாறுவேடம், தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பு தொழிநுட்பம் போன்ற பாடங்களையும் புதிதாக இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கான அனைத்துத் தொழிநுட்ப உபகரணங்களுடன் கூடிய கலையரங்குத் தொகுதியொன்றை நிர்மாணித்து 2023 இல் அதனை ஹொலிவூட் மற்றும் பொலிவூட் நிலைமைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாவதும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இங்கு, பெல்வூட் நிறுவனத்தின் மாணவர்கள் தற்பொழுது முகங்கொடுக்கும் சிக்கல்கள் பல காணப்பட்டதாகவும், விசேடமாக முழுநேர அதிபர் இல்லாமை, உணவுப் பிரச்சினை, போக்குவரத்து சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரினால் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் உறுப்பினர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
பெல்வூட் நுண்கலைக் கல்லூரி அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில் உள்ள 4 மாடிக்கட்டடம் 2015 – 2019 காலப்பகுதியில் இருந்த தலைவரினால் உடைத்து அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விரைவாகக் கண்டறிந்து அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இலங்கையில் காணப்படும் சர்வதேச தரம் வாய்ந்த ஒரே ஒரு ஹொக்கி விளையாட்டரங்கின் மைதானத்தை முறையாகப் பராமரிக்காமை காரணமாக உரிய தரத்தில் இல்லாமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அதனைப் புனரமைத்து ஹொக்கி விளையாட்டுக்காக பேணுவதன் அவசியம் குறித்து உறுப்பினர்கள் இதன்போது கருத்துத் தெரிவித்தனர். 50% நிதிப் பங்களிப்பை இலங்கை ஏற்பதன் அடிப்படையில் ஆசிய ஹொக்கி சம்மேளனத்தினால் அதனை அபிவிருத்தி செய்ய இணங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோன்று, தியகம விளையாட்டரங்கின் செயற்கை ஓடுபாதை சேதமடைந்துள்ளமை குறித்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், அதனால் சுகததாச விளையாட்டரங்கு அல்லாமல் பயிற்சி பெறுவதற்கு ஓடுபாதையொன்று இல்லை என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக விளையாட்டரங்கு முறையாகப் பராமரிக்கப்படாமையினால் மழை காலத்தில் நனைவதால் சேதமடைந்துள்ளமை பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஜப்பானிய உதவி மற்றும் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தைப் புனரமைப்பு செய்வதற்கு ஜப்பானிய தூதரகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார். அதேபோன்று, இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈட்டப்படும் வருமானத்தை அதன் பராமரிப்புக்குப் பயன்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைகள் செயற்படாமையால் மாகாண மற்றும் பிரதேச விளையாட்டுக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டதுடன் அது தேசிய ரீதியில் விளையாட்டு வீரர்கள் உருவாகுவதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதனால் இது தொடர்பிலும் அமைச்சரின் கவனத்தை செலுத்துமாறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். நாடு பூராகவும் காணப்படும் பல்வேறு விளையாட்டு சம்மேளனங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சினால் ஆரம்பிக்க வேண்டும் எனவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டு சங்கங்களை குழுவில் அழைத்து கலந்துரையாடுவது தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் குழுவின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ரோஹன திசாநாயக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, காவிந்த ஜயவர்தன, நலின் பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, ஜகத் சமரவிக்ரம, வீரசுமன வீரசிங்க, சம்பத் அத்துகோரல, சிந்தக்க மாயாதுன்ன, வருண பிரியந்த லியனகே, மொஹமட் முசம்மில், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.