திருவண்ணாமலையில் இன்று தீபத்திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள், அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, அன்று காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனியும், இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். வரும் 28ம் தேதி 2ம் நாள் நாள் காலை உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

 வரும் 29ம் தேதி 3ம் நாள் காலை உற்சவத்தில் நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் சிம்ம வாகனம், வெள்ளி அன்னவாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். வரும் 30ம் தேதி நான்காம் நாள் உற்சவத்தில், காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர்.அடுத்த மாதம் 1ம் தேதி ஐந்தாம் நாள் காலை உற்வசத்தில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து, 2ம் தேதி 6ம் நாள் காலை உற்வசத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும். வரும் 3ம் தேதி ஏழாம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறும். வரும் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.