நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது – மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் பிறந்தநாள் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையை பிச்சை பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் எந்த வகையிலும் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையர்களாகிய நாம் சுய முயற்சியில் எழுந்து நிற்க வேண்டும் எனவும், அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக்கூடிய எண்ணக்கருவை லலித் அத்துலத்முதலி கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் பட்டப்பின்படிப்பை தொடரக் கூடிய வகையில் லலித் அத்துலத்முதலியின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இலங்கை இளைஞர்கள் சர்வதேச சந்தையுடன் சுயமாக தொடர்புபடக்கூடிய வசதிகளை வழங்கும் சிறப்பு டிஜிட்டல் தள அறிமுகமும் இன்று லலித் அத்துலத்முதலி அறக்கட்டளையினால் செய்யப்பட்டது.
 
பிறந்த நாள் விழாவில் உரையாற்றிய லலித் அத்துலத்முதலி அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க, கிராமப்புற மக்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் லலித் அத்துலத்முதலி, மஹபொல புலமைப்பரிசில் முறையை அறிமுகப்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.
 
அவர் உயிருடன் இருந்திருந்தால் இம்முறைமை மேலும் மேம்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கும் என குறிப்பிட்ட ரவி கருணாநாயக்க, மஹபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நாட்டின் பிள்ளைகளுக்கு கல்விப் பாதைகளை திறந்து வைத்ததாகவும் தெரிவித்தார்.
 
மஹபொல புலமைப்பரிசிலின் கீழ் கல்வி கற்கும் பிள்ளைகள் நாட்டிற்காக பெரும் பணியை நிறைவேற்றியுள்ளனர் என சுட்டிக்காட்டிய அவர், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளம் மகபொல புலமைப்பரிசிலின் கீழ் கல்வி கற்ற மாணவர்களால் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
 
ஜப்பானின் பிரதம சங்கநாயக வண. பெல்பொல விபஸ்ஸி தேரர், நுகேகொடை நாளந்தாராமதிபதி வண. தீனியாவல பாலித தேரர், சேதவத்தை மங்களாராமதிபதி வண. அம்பன்வல ஞானாலோக தேரர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) சரத் வீரசேகர, ரவூப் ஹக்கீம், அஜித் மான்னப்பெரும, ஹர்ஷன ராஜகருணா, மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
President’s Media Division

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.