பயிர் காப்பீடு திட்டத்தில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம்: ஒன்றிய வேளாண் அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: மாறி வரும் பருவநிலை, தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அகுஜா கூறியதாவது:
இயற்கை சீற்றம் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க பிரதமரின் பீமா யோஜனா பயிர் காப்பீடுத் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, பருவநிலை மாறுபாடு காரணமாக வேளாண் விவசாயிகள், பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஊரக பகுதிகளில் உற்பத்தியாகும் அனைத்து விளைபொருட்களுக்கும் பயிர் காப்பீட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

 சமீப காலமாக ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப விவசாயிகள் நலனுக்கான பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய வேளாண் அமைச்சகம் தயாராக இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.1,25,662 கோடி ஒன்றிய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ளது. இதே காலக் கட்டத்தில் பயிர் காப்பீடு செய்துக்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை 282 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.