'எதிர்பார்க்காதது.. ஆச்சரியமா இருக்கு..!' – அசோக் கெலாட் மீது காங்கிரஸ் அப்செட்?

சச்சின் பைலட் குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்த கருத்துக்கள் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு அடுத்த படியாக மூத்தத் தலைவராக பார்க்கப்படுபவர் சச்சின் பைலட். இளம் தலைவரான சச்சின் பைலட்டிற்கு, இளைஞர்களின் ஆதரவு அதிகம் உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். எதிர்பாராத இந்த அரசியல் நெருக்கடி காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

எனினும், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, சச்சின் பைலட் அமைதி ஆனார். இருப்பினும், முதலமைச்சர் அசோக் கெலாட் – சச்சின் பைலட் இடையே இன்னனும் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற கிட்டத்தட்ட ஓராண்டே உள்ள நிலையில், இரு பெரும் தலைவர்களின் கருத்து வேறுபாடு, காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நேற்று, ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஒரு துரோகி என்றும், அவர் என்றும் முதலமைச்சர் ஆக முடியாது என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். அசோக் கெலாட்டின் இந்தக் கருத்து, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பேட்டியில் பயன்படுத்திய வார்த்தைகள் எதிர்பாராதவை மற்றும் ஆச்சரியம் அளிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பம் போன்றது. அந்த குடும்பத்திற்கு அசோக் கெலாட்டும் தேவை; சச்சின் பைலட்டும் தேவை. குடும்பத்தில் ஒரு சில பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் நிலவலாம். அவை விரைவில் தீர்க்கப்படும். என்ன முடிவு எடுக்கப்பட்டாலும், மூத்தத் தலைவர்களான அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.