ஜும்மா மசூதியில் பெண்கள் நுழைய தடை – ஆளுநர் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பை வாபஸ் பெற்றார் இமாம்

புதுடெல்லி: டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜும்மா மசூதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இதன் 3 முக்கிய நுழைவாயில்களுக்கு வெளியே சில நாட்களுக்கு முன் ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டது. பெண்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து பெண்ணுரிமை செயற்பாட்டாளர் ரஞ்சனா குமாரி கூறும்போது, “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது என்ன மாதிரியான 10-ம் நூற்றாண்டு மனநிலை. இது ஜனநாயக நாடு. அவர்களால் எப்படி பெண்களை தடுக்க முடியும்?” என்றார்.

மற்றொரு பெண்ணுரிமை செயற்பாட்டாளர் யோகிதா பாயனா கூறும்போது, “இந்த உத்தரவு நம்மை 100 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. இது பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, பெண்களைப் பற்றி இந்த மதக் குழுக்களின் மனோபாவம் என்ன என்பதையும் காட்டுகிறது” என்றார்.

இதையடுத்து ஜும்மா மசூதியின் ஷாகி இமாம் சையது அகமது புகாரி கூறும்போது, “இந்த பாரம்பரிய கட்டிட வளாகத்தில் சில சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது ஒரு வழிபாட்டுத் தலம். இதற்கு மக்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் பெண்கள் தனியாக வந்து தங்கள் ஆண் நண்பர்களுக்காக காத்திருக்கிறார்கள். அதனால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

மசூதி, கோயில் அல்லது குருத்வாரா எதுவாக இருந்தாலும் அது வழிபாட்டுக்குரிய இடம். இந்த நோக்கத்துக்காக வருபவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை” என்றார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜும்மா மசூதி ஷாகி இமாம் உடன் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நேற்று பேசினார். இதையடுத்து மசூதிக்குள் பெண்களுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை திரும்பப் பெற இமாம் ஒப்புக்கொண்டார்.

மகளிர் ஆணையம்: முன்னதாக இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.