கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் மின்கட்டணம் யூனிட் 8 ரூபாய் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி “சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் என்னிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் நேரடியாக தகவலை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
எதிர்க்கட்சிகளாக இருக்கக்கூடிய அதிமுக மற்றும் பாஜக சமூக வலைதளங்களில் தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனவே யாரும் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் தற்பொழுது மின்கட்டணம் செலுத்தலாம்.
பொதுமக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் நல்லது. மின் இணைப்பைப் பெற்றவர்கள் ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும். ஒரு சில இடங்களில் மின் இணைப்பு பெற்றவர்கள் இறந்து கூட இருக்கலாம். இறந்தவர்களின் பெயரில் உள்ள மின் இணைப்புகளை பெயர் மாற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே மின் இணைப்புக்கான பெயர் மாற்றுதலை சிறப்பு முகாம் மூலம் மக்கள் பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் 100% அவசியம். ஏனென்றால் மின்சாரத் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள கண்டிப்பாக ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே சாத்தியமாகும் என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.