காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் கலந்துகொள்ள இதுவரை எவ்வித அழைப்பும் வரவில்லை: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னையில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நூறு வருட பழமையான நாடக கொட்டகையை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது. இந்த கொட்டகையை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மீட்கப்பட்டுள்ள பழமையான இடத்தை மீண்டும் மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றுவது குறித்து திட்டமிட்டு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள உருது பள்ளிக்கு அருகில் 1400 சதுர அடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள உருது பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதால் அங்கு போதுமான இடவசதி இல்லை.

எனவே மீட்கப்பட்ட இடத்தில் உருது பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும். சென்னை மாநகராட்சியின் விக்டோரியா கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும். ஓரிரு மாதங்களில் பணிகள் முழுமையடைந்த பின் விக்டோரியா அரங்கை முதலமைச்சர் திறந்து வைப்பார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறையின் நிதி உதவியில் யாரையும் அனுப்பவில்லை. காசி தமிழ் சங்கமத்திற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. எந்த ஒரு துறை மிக சிறப்பாக செயல்படுகிறதோ அந்த துறையை தான் குறை சொல்வார்கள். தமிழ்நாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என பொன்மாணிக்கவேல் தெரிவித்தது வலதுசாரிகளின் குரலாக கூட இருக்கலாம்.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.