குஜராத் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகின்றனர். பாஜக தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஒரே நாளில் நான்கு இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். நேற்று மாலை அகமதாபாத்தின் பாவ்லா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அந்நேரம் மர்ம டிரோன் ஒன்று அப்பகுதியில் பறந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர்.

இச்சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் டிரோன்களை பறக்கவிட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பிரதமரின் தேர்தல் பிரசாரத்தை டிரோனில் வீடியோ எடுக்க முடிவு செய்து அதனை அனுப்பி இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் இருக்கும் இடத்தில் வானில் எந்த வாகனமும் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், எப்படி டிரோன் பறந்தது என்றும், பிரதமரின் பாதுகாப்பில் எப்படி குளறுபடி ஏற்பட்டது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.