சபரிமலையில் சின்னம்மை நோய்; ஐயப்ப பக்தர்களுக்கு திடீர் உத்தரவு!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் உள்ளது. இந்த கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த 16ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முறை கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகின்றனர்.

சபரிமலையில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கும் நிலையில் கோயில் சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளை செய்து வருகின்றனர்.

சன்னிதானம் அருகே 18 படி ஏறி வரும்போது, பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி உள்ளிட்ட திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு வருகை தரும் ஐய்யப் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேரள தேவசம் போர்டு செய்துள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு உணவு பொருள்கள் விற்பனை செய்ய ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் விற்கப்படும் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் விலை நிர்ணயம் செய்துள்ளது. அந்த விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்.

இதை பொருட்படுத்தாமல் சபரிமலையில் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தபடி உள்ளது.

இதன் எதிரொலியாக நேற்று மாலை சபரிமலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாக இருக்கிறதா? கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சபரிமலை, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 175 கடைகளில் நடந்த சோதனையில் பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு உணவு பொருள் விற்ற 6 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மேலும் இது போல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இனியும் விதிமீறல் செய்தால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தான் சபரிமலையில் மழை ஓய்ந்து நல்ல வெயில் அடிக்கும் நிலையில் சின்னம்மை பரவி வருகிறது. இதன் காரணமாக, 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நோய் உறுதி செய்யப்பட்டுள்ள 5 போலீசாரும் அவர்களுடைய வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீஸ் குடியிருப்பு அமைந்து உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள போலீசாருடன் தங்கி இருந்த 12 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதோடு அவர்கள் சுகாதார துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.

நோய் மேலும் பரவாமல் இருக்க எல்லா போலீசாரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் முடிந்த அளவு மாஸ்க் அணிந்து நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதார துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.