வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
‘தனிமரம் தோப்பாகாது!’ என்ற ஆதிகாலப் பழமொழியை அதள பாதாளத்துக்குள் தோண்டிப் புதைத்தவர் தேவராஜன்.
வாத்தியார் உத்தோகத்துக்குப் படித்துவிட்டு ஊர்விட்டு ஊர்வந்து ஒற்றை மனிதராய் ஒரு உறவுக்காரரும் உதவிக்கு இல்லாமல் தானே தனி ஆளாய் வீடு பார்த்துக் குடியிருந்து, வேலை தேடி நாயாய் அலைந்து பட்டினி கிடந்து படாத பாடு பட்டு ஆளாகி, வேலை கிடைக்க, வயிறார உண்டு ஆளானவர் அவர்.
வாத்தியார் உத்யோகத்தில் அன்றைக்கெல்லாம் இன்றைக்கு மாதிரி சம்பளம் இல்லை. ஆனால், மரியாதை உண்டு. வாடகைக்கு வீடு தனி மனிதன் வாத்தியார் என்றால்தான் எந்த மறுப்பும் சொல்லாமல் கொடுப்பார்கள்., கொடுத்தார்கள். கிராமம் ஒன்றில் கிடுகு வேய்ந்த வீட்டில் குடியிருந்து கல்யாணம் பண்ணி, நாலு பிள்ளைகள் பெற்று இன்று சொந்தமாய் வீடு கட்டி, செடி கொடிகள் வைத்து, நாலு பிள்ளைகளும் நல்ல நிலையில் கல்யாணம் காட்சி முடித்து மரியாதையோடு நல்ல நிலையில் குடியிருக்கிறார்கள் என்றால், அன்றைய ஆதி காலப் பழமொழியை அவர் அதள பாதாளத்துள் புதைக்கப்பட்டுவிட்டது என்று தானே அர்த்தம்?!

தனி ஆளாய் இருப்பவரைக் கெடுக்க எத்தனை எத்தனை உபாயங்கள் உண்டு. மது, மாது என்று பெயர் சொல்ல முடியாத பெரும் பெரும் வஸ்துகளுக்கெல்லாம் வயப்படாமல் வாழ்ந்ததால்தான் தேவராஜனுக்குப் பொண்ணு கொடுத்தார்கள். பணம் காசு வந்ததுக்குப் பிறகு, எல்லா உறவுக்காரர்களும் ஓடிவந்து ஒட்டிக் கொண்டார்கள்.
தனி மரமாய் ஊர்விட்டு ஊர்வந்தவர் அவர். ஒருத்தரிடம் கைமாத்துக்குக்கூட கடன் வாங்க முடியாது. வாங்கவில்லை. அவரே அவருக்கு ஒரு எல்லை போட்டுக் கொண்டார், ‘என்னதான் சதுரங்க ராஜாவானாலும் அந்த ராஜா சதுரங்கக் கட்டம் தாண்டி கீழிறங்குவதில்லை அல்லவா?!’ அதுமாதிரி கீழே இறங்காமல் இருந்து, தன்னைத் தன் கண்னை உணர்வைக் காத்து வாழ்ந்ததால் இன்று அவரின் நாலு பிள்ளைகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
இன்று வயது முதிர்ந்து எண்பது வயது நெருங்க, மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். ஆறுதல் சொல்லப் போன ஆறுமுகம் அவரிடம் இத்தனையையும் எடுத்துச் சொல்லி, ‘அத்தான் நீங்க ஒழுக்கமா இருந்து பிள்ளைகளை ஆளாக்கி இருக்கீங்க! தனிமரமாய் இருந்த நீங்க, உங்க பிள்ளைகள் என்கிற கிளைகள், பேரன் பேத்திகள் என்கிற கன்றுகளோடு இன்று தனிமரமாய் அல்லாமல், தோப்பாய்த் தழைத்து நிற்கிறீர்கள். நீங்கள்தான் ‘தனிமரம் தோப்பாகாது!’ என்கிற பழமொழியைத் தோற்கடித்த முதல் மனிதர்.
உங்கள் உண்மை, நேர்மை உங்களைத் தனிமரமல்ல தோப்பு தோட்டம் என்கிற உயர் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது!’ என்று உற்சாகம் கொடுத்துப் பேசிவிட்டு, நோய் வாய்ப் படுவதென்பது வயதானவர்களுக்கெல்லாம் வருகிற ஒன்றுதான். ஆனால், உங்களைப் பார்க்க வருகிறவர்களில் சிலர், ‘நீங்கள் ஒடிந்து போகிறமாதிரி பேசலாம். நடந்து கொள்ளலாம் அவர்கள் தகுதி அவ்வளவுதான்., அதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்!’ ஆனால், அத்தனைக்கும் பின்புறம் உங்கள் மீதான பொறாமையும் போட்டி மனப்பான்மையுமே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மனம் தளரவிடாதீங்க!’ என்றார் ஆறுமுகம்.
சிலருக்கு நோயாளிகளிடம் எப்படி ஆதரவாய்ப் பேச வேண்டும் என்பதே தெரிவதில்லை. ஆனால், ஆறுமுகத்தின் அனுசரணையான பேச்சு, தேவராஜனைத் திடம் கொள்ள வைத்தது. தேகத்துக்குப் புத்துயிர் கொடுத்தது.
எல்லாருக்கும் இப்படி நிகழ்ந்துவிடாது! ‘தனிமனித ஒழுக்கம் என்பது ‘தனக்குத் தான் நிர்ணயிப்பது’. தன்னை கண்காணிக்க யாரும் இல்லை என்றபோதும், ஒருவர் தன்னிலை தவறாமைதான் வெற்றிக்கு வித்திடும். இந்தத் தனிமனித ஒழுக்கம் உயர்வானது. தனிமனித ஒழுக்கம் காப்பதே தனிமரங்கள் தோப்பாகத் துணைநிற்கும் உரம்.
எல்லாத் தனிமரங்களும் தோப்பாகாது. தனிமனித ஒழுக்கம் காப்பவன் தோப்பும் தோட்டமுமாய் கிளைத்து வளர்கிறான்.
-வளர்கவி, கோவை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.