தமிழகத்தில் சென்னையை அடுத்து திருச்சியில் தான் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கும், உள்நாடுகளுக்கும் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மூன்று விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதிலும் குறிப்பாக அவர்கள் கொண்டு வந்த உடமைகளை நவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்ததில், சுமார் 25 பயணிகளிடம் இருந்து சுமார் 7.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த தங்கத்தின் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.3.75 கோடி ஆகும். மேலும் இதுகுறித்து முழு தகவல்களும் விசாரணை நிறைவு பெற்ற பிறகு அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.