பாட்னா, பீஹாரில் பராமரிப்பு மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் இன்ஜினை ஒவ்வொரு பாகமாக கழற்றி, திருடிச் சென்று விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பராமரிப்பு மையம் வரை சுரங்கம் தோண்டி, இந்த திருட்டை அரங்கேற்றிய அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பெகுசராய் மாவட்டத்தில் கார்கரா என்ற இடத்தில் ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலை உள்ளது.
இங்கு, சில மாதங்களுக்கு முன், பராமரிப்பு பணிக்காக ஒரு ரயில் இன்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சமீப நாட்களாக இந்த இன்ஜினை காணவில்லை. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வந்தனர்.
அப்போது, இன்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கீழே சுரங்கம் போன்ற பள்ளம் தென்பட்டது. அதில் இறங்கி பார்த்தபோது, சுரங்கப் பாதை நீண்ட துாரத்துக்கு சென்றது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ரயில் பராமரிப்பு மையத்துக்கு அருகே ஏற்கனவே ஒரு சுரங்கப் பாதை இருந்து, பல ஆண்டுகளாக அது பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது.இதையறிந்த மூன்று பேர், அந்த சுரங்கப்பாதையை மீண்டும் தோண்டி, அதன் வழியே வந்து ரயில் இன்ஜினை ஒவ்வொரு பாகமாக கழற்றி, திருடி எடுத்து வந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு உள்ளேயே மொத்த இன்ஜினையும் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி எடுத்து வந்து விட்டனர். அந்த இன்ஜின் பாகங்களை முஜாப்பர்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்றுள்ளனர்.
அங்கு சென்று சோதனை நடத்தியபோது, ரயில் இன்ஜின் பாகங்கள் பெரிய பெரிய பைகளில் கட்டி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தோம். சுரங்கம் தோண்டி ரயில் இன்ஜினை ஒவ்வொரு பாகமாக கழற்றி திருடிய மூவரையும் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement