மின்சாரம் தாக்கி கர்ப்பிணி மனைவி சாவு புதைகுழியில் சடலம் மீது அமர்ந்து நிர்வாண பூஜை செய்த கணவன்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த 5 மாத கர்ப்பிணி மனைவியின் சடலத்தின் மீது உப்பு போட்டு அமர்ந்து அகோரிபோல கணவன் நிர்வாண பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சின்ன பசலிகுட்டையைச் சேர்ந்தவர் ராஜாதேசிங்கு. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு பூர்ணிமா (25) என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பூர்ணிமா, கடந்த 22ம் தேதி மாட்டு கொட்டகையை வாட்டர் சர்வீஸ் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனை முடிந்து பூர்ணிமாவின் சடலம் நேற்று முன்தினம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதற்காக தோண்டப்பட்ட குழியில் அவருடைய கணவர் ராஜதேசிங்கு உப்பை கொட்டி விட்டு அதில் திடீரென நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்யத் தொடங்கினார். பூர்ணிமாவின் சடலத்தின் மீதும் தன் மீதும் உப்பை கொட்டிக்கொண்டு அகோரி போல படுத்த நிலையிலும், அமர்ந்த நிலையிலும் பூஜை செய்தார்.

இறுதி சடங்கில் பங்கேற்க வந்த உறவினர்கள் யாரையும் அனுமதிக்காமல் அகோரி போல கர்ஜித்தபடி சுமார் 3 மணி நேரம் தியானங்களை மேற்கொண்டார். மனைவி முகத்தை யாரும் பார்க்க கூடாது என்று கூறி அனைவரையும் வெளியே கலைந்து போக செய்தார். அதன் பின்னர் அவரே மண்வெட்டியால் மனைவி உடலுக்கு மண்ணை போட்டு குழியை மூடிவிட்டு வீடு திரும்பினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜா தேசிங்கு சாமியாராக மாறியதாக  தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.