ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: 45 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் – தமிழக அரசு தகவல்!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது எனவும், 45 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்து இருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அதே நேரம் 20 தினங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை, கடந்த ஜனவரி மாதம் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில் உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. கடந்த ஜூன் மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பண மோசடி தொடர்பான வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
image
பிறகு கடந்த செப்டம்பர் மாதம் ராஜேந்திர பாலாஜி தமிழக முழுவதும் பயணம் செய்ய அனுமதி அளித்தும், வழக்கு விசாரணை நடைபெறும் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது, விசாரணை அதிகாரியிடம் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும் என நிபந்தனைகளை தளர்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்துவிட்டது, ஆனால் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எப்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வீர்கள் என நீதிபதிகள் கேட்டபோது, அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டது, 45 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்தார். இதனையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கான இடைக்கால ஜாமீன் அடுத்த 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், மேற்கொண்டு சம்மன் ஏதேனும் அனுப்பப்பட்டால், ராஜேந்திர பாலாஜி சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.