நவம்பர்-25: `பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்!' – சிறப்புப் பகிர்வு

’பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம்’ நேற்று (நவம்பர் 25). டொமினிகன் குடியரசு நாட்டின் (Dominican republic) அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்த மூன்று பெண் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட நாள் நவம்பர் 25. அந்த மூன்று பெண் செயற்பாட்டாளர்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. 

பெண்கள்

இன்றைய தினத்தில், உலக அளவில் பெண்கள் சந்தித்துவரும் சில முக்கியப் பிரச்னைகளைக் கவனப்படுத்துவது அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்தாலும், ஒருசில துறைகளுக்குள் நுழைவதும், அவற்றில் முன்னேறிச் செல்வதும் பெண்களுக்கு கூடுதல் சவாலாக இருக்கிறது.

ஊடகத்துறையைப் பொறுத்த அளவில், ஆண் பத்திரிகையாளர்களைக்காட்டிலும் பெண் பத்திரிகையாளர்கள் சந்தித்துவரும் பிரச்னைகளும் சவால்களும் அதிகம். ஐ.நா., நவம்பர் 2-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 2021-ம் ஆண்டு உலகில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் 11 சதவிகிதம் பேர் பெண்கள். ஐ.நா-வின் சர்வதேசப் பத்திரிகையாளர் அரங்கம் நடத்திய ஆய்வில், சுமார் 73 சதவிகிதப் பெண்கள் ஆன்லைன் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்திருக்கிறது.

பெண்

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரனிடம்  பேசினோம். “பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு, மற்ற துறைகளில் பணியாற்றுபவர்களைவிட சவால்கள் அதிகம். பெண் பத்திரிகையாளர்கள், சூழலியல் பிரச்னைகள் குறித்தும், சமூகப் பிரச்னைகள் குறித்தும் தீர்க்கமாக எழுதக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

பெண் பத்திரிகையாளர்கள் உண்மைகளை எழுதும்போது, அவர்களுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் தவறாகப் பிரசாரம் செய்கிறார்கள். பெண் பத்திரிகையாளர்களின் தைரியமான செயல்பாடுகளை சிலர் விரும்புவதில்லை.

கவிதா முரளிதரன்

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் ஆண் நெறியாளர்களை `வாங்க… போங்க’ என்று மரியாதையுடன் அழைக்கும் அரசியல் பிரபலங்கள், பெண் நெறியாளர்களை ஒருமையில் அழைப்பதைப் பார்த்துவருகிறோம். இது மிகப்பெரிய அவலம். வார்த்தைகளாலும், செயலாலும் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லைகள் தரப்பட்டால், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார் கவிதா முரளிதரன்.

இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் சுந்தரவள்ளியிடம் பேசினோம். “பத்திரிகைத்துறையில் பெண்கள் அதிகாரத்தை எதிர்த்து எழுதுவதாலும், பெண் என்ற காரணத்தாலும் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இணையப் பத்திரிகைகளில் பல பெண் பத்திரிகையாளர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த தவறுகளை வெளிக்கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். 

சுந்தரவள்ளி

பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பங்களிலும், பணியிடங்களிலும், பொதுச் சமூகத்திலும் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்” என்கிறார் பேராசிரியர் சுந்தரவள்ளி. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.