புதுடெல்லி,
டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் இந்த தொடரில் விராட் கோலி 4 அரை சதங்களுடன் 296 ரன்களை எடுத்து டி20 உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா சந்தித்தது. இதில் கோலி பேட்டிங் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது. கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 ரன்களை விளாசி இந்தியா ஒரு வரலாற்று வெற்றியை அடைய வழிவகுத்திருந்தார்.கோலியின் இந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்உலக கோப்பையில் ரசிகர்களால் தற்போது வரை பேசி வரும் போட்டி என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தான்.
மேலும், இந்த டி 20 உலக கோப்பை தொடரில் சிறந்த போட்டி இது தான் என்றும் பலர் குறிப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக உருக்கமான பதிவு ஒன்றையும் விராட் கோலி பகிர்ந்துள்ளார். பேட்டிங் முடிந்து மைதானத்தில் இருந்து தான் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்றை பகிரந்த விராட் கோலி,
“அக்டோபர் 23, 2022 எப்போதும் என் மனதில் சிறப்பான நாளாக இருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் இப்படி ஒரு எனர்ஜியை இதற்கு முன்பு நான் உணர்ந்ததே இல்லை. எப்படி ஒரு பாக்கியம் நிறைந்த மாலை வேளை அது” என நெகிழ்ந்து போய் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.