அரசியல் ஜோக்கர் அண்ணாமலை; தொல்.திருமாவளவன் கலாய்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் ஜோக்கராக மாறி விட்டார் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சனம் தெரிவித்து உள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கதிரேசன் தலைமை தாங்கினார். பதிவாளர் டாக்டர் சீதாராமன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன், காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

முதலில் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அனைவரும் மரியாதை செலுத்தினர். பின்னர் இந்திய அரசியல் சாசன முகப்புரையை

வாசிக்க, அனைவரும் அதை திருப்பி வாசித்தனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்று அரசியலமைப்பு சட்ட நாள். ஒட்டுமொத்த இந்திய மக்களும் நினைவு கூர்ந்து பெருமைப்பட வேண்டிய நாள். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை பாதுகாக்க குடிமக்களாகிய நாம் உறுதி ஏற்க வேண்டிய நாள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற அடிப்படையான கோட்பாடுகளை அரசியலமைப்பு சட்டத்தின் வழி வழங்கிய அம்பேத்கருக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள். இந்த நாளில் சமூக சமத்துவத்தை நிலைநாட்ட ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிக்கும், எல்லோருக்கும் தேர்தலில் போட்டியிடக்கூடிய உரிமை உண்டு. சிதம்பரம் தொகுதியில் பாஜகவும் போட்டியிடலாம். அதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை பகைவர்களை அரசியல் களத்தில், தேர்தல் களத்தில் எப்படி எதிர் கொள்ள வேண்டுமோ அப்படி எதிர் கொள்வோம். தமிழ்நாட்டில் பாஜகவை தனிப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற அரசியலை தொடர்ந்து முன்னெடுப்போம். இந்திய அளவிலும் இதை விரிவுபடுத்துவோம்.

அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டு பாஜக, தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் திமுகவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அது மக்களிடம் எடுபடவில்லை. அண்ணாமலை ஒரு அரசியல் ஜோக்கராக மாறிவிட்டார். ஆதாரமில்லாத அவதூறுகளை அதிமுகவினர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆதாரத்தோடு புகார்களை முன்வைக்க வேண்டும். அதை ஆளுங்கட்சி, திமுக அரசு எதிர்கொள்ளும். ஆதாரம் இருந்தால் சட்டப்படி அணுகட்டும்.

மக்களின் பிரச்னைகள் குறித்து களப்பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். தேர்தல் பணியை உரிய நேரத்தில் தொடங்குவோம். அதற்கு இப்போது அவசியம் இல்லை. அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த் துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தமிழக அரசு பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருவதால் இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.