மேகாலயாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: முதல்வர் சங்மா தகவல்

ஷில்லாங்: மேகாலயாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்று முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாயன்று மரங்களை கடத்திச் சென்ற லாரிகள் மீது எல்லையில் அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் அசாம் – மேகாலயா எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது.

முக்ரோவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மேகாலயாவை சேர்ந்த 5 பேர், அசாம் வனக்காவலர் ஒருவர் உயிரிழந்தனர். இதனால், மீண்டும் பதற்றம் வெடித்தது. இதன் எதிரொலியாக மேகாலயாவிலும் அசாம் பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி மேகாலயாவிற்கு எரிபொருள் எடுத்து செல்வதை நிறுத்திவிட்டதாக அசாம் பெட்ரோலியம் மஸ்தூர் சங்கம் அறிவித்தது.

இதனால், இந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. பொதுமக்கள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்க்குகளை முற்றுகையிட்டனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது குறித்து மேகாலயா முதல்வர் சங்மா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மேகாலயாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. கையிருப்பு, விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்,’ என கூறியுள்ளார்.

இந்நிலையில், மேகாலயா அரசு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, எரிபொருள் டாங்கர்  போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதாக அசாம் மஸ்தூர் சங்கம் அறிவித்துள்ளது.

மேகாலயா செல்ல வேண்டாம்
மேகாலயா-அசாம் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் மேகாலயா செல்ல வேண்டாம் என்று அசாம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். போலீசாரின் அறிவிப்பில், ‘அண்டை மாநிலமான மேகாலயாவில் நிலைமை இன்னும் சீராகவில்லை. அங்கு போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. பலர் காயமடைந்துள்ளனர். எனவே, நிலைமை சரியாகும் வரை அசாம் மக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது,’ என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், மேகாலயாவில் 22ம் தேதி நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புக்கள் அழைப்பு விடுத்து இருந்தன. எனவே, அரசு அலுவலகங்களில் குறைவான ஊழியர்களே பணிக்கு வந்து இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.