தேசியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் தென்னிந்திய இயக்குனர் மனோகர் முதல்வர் ஸ்டாலின் கூறிய புள்ளி விவரங்கள் தவறானவை என்பதால் மாற்று திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “கடந்த 24ஆம் தேதி நடந்த மாற்று திறனாளிகள் மாநில வாரிய ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று அறிவிப்புகளை வெளியிட்டார்.
விழா மேடையில் அவர் கூறிய புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானவை. மாற்றுத்திறனாளிகளுக்காக பராமரிப்பு தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக கூறினார். ஆனால் கடும் ஊனம் அடைந்தவர்களுக்கு 1500 ரூபாய் ஊக்கத்தொகை மட்டுமே 2000 ரூபாயாக தற்பொழுது உயர்த்தப்பட்டது. மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்படவில்லை. சுமார் 4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் ரூ.1000 பராமரிப்பு தொகை வாங்குகின்றனர்.
தமிழக முதல்வர் 2 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டதாக கூறுகிறார். ஆனால் கடும் ஊனமடைந்த 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தவறான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் தருகிறார். இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் பறிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் நான்கு சதவீத வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான வழிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். இதனால் வரும் டிசம்பர் 3ம் தேதி உலக மாற்று திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.