சென்னையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஒன்று மெரினா கடற்கரை. இங்கு தினமும் ஏராளமான மக்கள் மன அமைதிக்காகவும், கடலின் அழகை கண்டு ரசிப்பதற்காகவும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில், 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் உடைய நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சிரமம் இன்றி நடப்பதற்காக நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பிலிருந்து சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்தவிதமான சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம்.
மேலும், சக்கர நாற்காலிகளை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
‘சிங்கார சென்னை 2.0’ என்ற திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தனது பிறந்தநாளான இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நேரு, தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..