புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் காசி தமிழ்ச் சங்கமம், கடந்த நவம்பர் 17-ம் தேதி தொடங்கியது. ஒரு மாதத்திற்கு நடைபெறும் இந்த விழாவில், பொது அரங்கை சுற்றிலும் சுமார் 70 வகையான ஸ்டால்களுடன் பொருட்காட்சி அரங்குகளும் அமைந்துள்ளன. இதில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மல்டிமீடியா டிஜிட்டல் புகைப்பட கண்காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
இந்த அரங்கில் நுழைந்ததும் மெல்லிய விளக்குகளின் ஒளி நம்மை திரையரங்கில் நுழைவதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ் மற்றும் இந்தி பட உலகின் புகழ்பெற்ற நட்சத்திரங்களின் படங்கள் பார்வையாளர்களை கவர்கின்றன. தமிழிலிருந்து பாலிவுட் சென்ற வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ரேகா மற்றும் ஸ்ரீதேவியின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ் திரைப்படங்களுடன் இந்திப் படங்களிலும் நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரும் டிஜிட்டலில் புன்னகை செய்கின்றனர்.
இதேபோல், தேசத் தந்தை மகாத்மா காந்தி, விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வல்லபபாய் படேல், காமராஜர் உள்ளிட்டோரின் படங்களும் விளக்கங்களுடன் உள்ளன.
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களில், வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன், பூலித்தேவர், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
1806-ல் திப்புசுல்தானின் மைந்தர்கள் தலைமை ஏற்று நடத்திய வேலூர் கலகமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டங்களை அடிப்படையாக வைத்து தமிழில் வெளியான திரைப்படங்களின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பள்ளி மாணவர்களை கவரும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காணும் டிஜிட்டல் வினாடி வினா போட்டியும் தொடுதிரையில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களை பார்த்து ஆம் அல்லது இல்லை என்று கூறி வெற்றி பெறுவோருக்கும் கலந்து கொள்பவர்களுக்கும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் டிஜிட்டல் சான்றிதழ் உடனடியாக அளிக்கப்படுகிறது.
வாரணாசி மக்களவை தொகுதி எம்.பி.யாக 2014-ல் பிரதமர் மோடி தேர்வான பிறகு செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்களும் படக்கண்காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்பட கண்காட்சியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பார்வையிட்டார். பிறகு அங்கிருந்த பதிவேட்டில், “கண்காட்சியை பார்த்து மகிழ்ந்தேன். இதில் தமிழகம் தொடர்பான பல நல்ல படங்களும் அதற்கான விளக்கங்களும் சித்தரிக்கப்பட்டுஉள்ளன. அதற்குரிய மொழிபெயர்ப்புகளும் வைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது” என்று தமிழிசை தனது கருத்தை பதிவு செய்தார்.