உலக வங்கியுடன் இணைந்து கிராமப்புர வீதிகளைஅபிவிருத்தி செய்யும் பணிகள் ,தெரிவு செய்யப்பட்ட மாகாணங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் இன்று (28) பாராளுமனறத்தில் தெரிவித்தார்.
2023 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ,
இந்த திட்டத்தின் கீழ்; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்க எதிர்பார்த்துள்ளோம். இவை சரியாக இடம்பெற்றால் ,கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான இணைப்பு, அதாவது உள்ளூர் உற்பத்தி, மீன் பிடித் தொழில்துறையை மேம்படுத்தல் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையை மையமாகக் கொண்ட வீதிகளை சரியாக இனங்கண்டு அபிவிருத்தி செய்யவும் நாம் திட்டமிட்டுள்ளோம்.
ஒரு நாடு விரைவாக அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால், அந்நாட்டின் போக்குவரத்துத் துறை, மின்சாரம், தொலைத் தொடர்பு, நீர்ப்பாசனம், குடிநீர் போன்ற மிக முக்கியமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு கிராமப்புரங்களுக்கான வீதிகளை புனரமைப்பதற்காக விசேடமாக வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சை உருவாக்கி உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி விசேடமானதொரு வேலைத்திட்டத்தை திட்டமிட்டு அதனைப் பொறுப்பேற்று வேலைகளை ஆரம்பித்தனர். துரதிஷ்டவசமாக உலகலாவிய ரீதியில் பரவிய கொவிட் தொற்று மற்றும் வேறு விதமான தாக்கம் காரணமாக ஏற்பட்ட பலவிதமான இழப்புக்களால் இன்று இத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
2020ஆம் ஆண்டும் 2023 ஆம் ஆண்டும் எமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் கனிசமான அளவு நிலுவையை செலுத்த வேண்டிய நிலையில் எமது அமைச்சு காணப்படுகின்றது.
மேலும் கிராமிய வீதிகள் மற்றும் கிராம பாலங்கள் என்பவற்றை அமைப்பதற்கு 5.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.