பிறப்பு மற்றும் இறப்பு சட்டம் 1969-ல் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தம் கொண்டுவர உள்ளது.டிசம்பர் 7ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வரைவு மசோதாவில் ” பிறப்புச் சான்று என்பது, ஒருவர் பிறந்த இடம் மற்றும் தேதியை நிரூபிக்க அளிக்கும் சான்று. இந்த சட்டத்தில் திருத்தம் செய்தபின், கல்விநிலையங்கள், ஓட்டுநர் உரிமம், திருமணப் பதிவு, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் வேலையில் சேர்வதற்கு, உள்ளாட்சி நிர்வாகத்தில் பணி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேரவும், மத்திய அரசு, மாநில அரசு கழகங்களில் பணியில் சேரவும், பாஸ்போர்ட் பெறுவதற்கும் பிறப்புச்சான்று கட்டாயமாக்கப்படும்.
இந்தப் புதிய சட்டத்திருத்தத்தில் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் ஆகியவை ஒருவர் இறந்தால் அதற்குரிய இறப்புச்சான்று நகல், மற்றும் இறப்புக்காரணங்கள் குறித்தும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். ஒருவருக்கு 18 வயது நிரம்பியவுடன் அவரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படும், அதேநேரம் உயிரிழப்பு நேர்ந்தாலும் நீக்கப்படும்.