பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய பதவி!

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. கிளைக்கழகம், பேரூர், நகரம், ஒன்றிய, மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியது.

மேலும், திமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், அவை தலைவர், தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று மாவட்ட வாரியாக தேர்வானவர்களின் பட்டியலும் வெளியானது.

இதையடுத்து, திமுக தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் பொதுக்குழு கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, திமுக சட்டத்திட்ட விதிகளின்படி, திமுகவில் உள்ள பல்வேறு அணிகளின் தலைவர், துணைத் தலைவர்கள் – செயலாளர் – இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் – உறுப்பினர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, திமுகவின் சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக சொத்து பாதுகாப்பு குழு தலைவராக அறந்தாங்கி இராசன், சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர்களாக பொங்கலூர் நா.பழனிசாமி, இ.ஏ.பி.சிவாஜி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செய்தித் தொடர்பு இணை செயலாளர்களாக தமிழன் பிரசன்னா, சிவ.ஜெயராஜ், கவிஞர் சல்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைமை கழக தேர்தல் பணிக்குழு தலைவர்களாக அமைச்சர் ராஜகண்ணப்பன், ப.ரங்கநாதன் மற்றும் திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவராக உ.மதிவாணன், துணை தலைவர்களாக பிஎன்பி சந்திரசேகரன், த.சந்திரசேகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக வாகை சந்திரசேகர், துணை தலைவர்களாக தமிழச்சி தங்கபாண்டியன், எம்ஆர்ஆர் வாசு விக்ரம், பேரவை செயலாளர்களாக உமாபதி, அர.திராவிடம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இளைஞரணி அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டார். மகளிரணி செயலாளராக இருந்த கனிமொழி, துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் காலியாக இருந்த மகளிரணி செயலாளர் பதவிக்கு ஹெலன் டேவிட்சனை நியமனம் செய்யப்பட்டார்.

இதேபோல், திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.