பீஜிங்: சீனாவில் மக்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் பல்வேறு மாகாணங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தங்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில் உரும்குயியில் அடுக்குமாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலியாயினர்.
அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அதிபர் ஜிஜின்பிங்கை பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் நாடு முழுதும் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன ஆட்சியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement