ரத்தக் கலரில் மாறிய குளம்… ஈரோட்டில் என்ன நடந்தது? நேரில் வந்த அமைச்சர் சாமிநாதன்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே செங்குளம் பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான இரும்பு உருக்காலை இயங்கி வருகிறது. இங்கு பெரிக்ஸ் பெராக்சைடு, குளோரோக்சைடு போன்ற சுத்திகரிக்கப்படாத ரசாயனங்களை பயன்படுத்தி இரும்பை உருக்குகின்றனர். இதிலிருந்து வரும் கழிவுகளை மழைநீருடன் திறந்து விடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மாசடைந்த குடிநீர்

இதன் காரணமாக செங்குளம் பகுதியில் உள்ள நான்கரை ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் தேங்கியுள்ள நீர் சிவப்பு நிறத்தில் மாறியது. இதில் ரசாயனங்கள் கலந்து காணப்படுவதால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் விவசாய நிலங்களிலும் புகுந்துள்ளது. இதை குடித்த ஆடு, மாடுகளும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இழப்பீடும், நடவடிக்கையும்

இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக வந்தனர். குளத்தில் தேங்கிய கழிவுகளை ஆய்வு செய்து மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இதற்கிடையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இதன் தொடர்ச்சியாக நேற்று ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாசு கட்டுபாட்டு வாரிய சுற்றுச்சூழல் மண்டல பொறியாளர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அவர்கள் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இரும்பு உருக்காலையை உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த சூழலில் ஆலையின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.

அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

இந்நிலையில் செங்குளம் பகுதியில் சிவப்பு நிறத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் மற்றும் குளத்தை ஒட்டியிருந்த விவசாய நிலங்களையும் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெருந்துறை சிப்காட் பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகள் முறையாக இயங்க வேண்டும். சரியான வழிகாடுதல்களை பின்பற்றாத காரணத்தால் கழிவுநீர் மக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகளை பாதிக்கின்றன.

தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை

செங்குளம் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் குளத்தில் ரசாயன கழிவுநீர் கலந்துள்ளது. இப்பகுதி மக்கள் பெருமளவில் விவசாயத்தை நம்பியுள்ளனர். இந்த கழிவுநீர் பிரச்சினையால் விவசாயம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. தொழிற்சாலைகள் இதுபோன்று கழிவுநீரை வெளியேற்றி வந்தால் விவசாயம் முற்றிலுமாக பாதிப்படையும். இதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விளைநிலங்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி உறுதியளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.