முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
காஸ் இணைப்புடன், ‘ஆதார்’ எண்ணை இணைக்க வேண்டும் என, 2016ல் மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும், மின்சார இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என கூறியிருப்பது, ‘ஊருக்கு தான் உபதேசம்’ என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.
தி.மு.க.,வினர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது எய்த, ‘வார்த்தை அம்புகள்’ எல்லாம், ஆளுங்கட்சியாக இருக்கும்போது திரும்பி தாக்குதே… இதுக்கு பேர் தான் ‘கர்மா’வா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாறி வரும் சூழலும், அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கமும், தமிழீழம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதற்கான காரணிகளாக உருவெடுத்து வருகின்றன. தனி தமிழீழம் அமைக்கப்படுவது தான், இந்தியாவின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும். ஐ.நா., வாயிலாக உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
‘தமிழகத்திற்காக போராடுகிறோம்’ என களத்தில் இறங்கியோர், நம் நாட்டில் செய்த சதி வேலைகளை மறந்து விட்டாரோ?
பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி:
கவர்னர் சரியாக செயல்படுவதால், தி.மு.க., எதிர்த்து வருகிறது. ‘திராவிட மாடல்’ என்பதே ஊழல், லஞ்சம் என்பதை தான் குறிக்கிறது. அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ் சினிமாவை, தி.மு.க., கட்சி குடும்ப நிறுவனங்கள் கபளீகரம் செய்து வருகின்றன.

மத்திய அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்கள்ல, ‘வெட்டி நியாயம்’ பேசுற நடிகர் கமல் இதை கண்டிச்சு குரல் எழுப்பாதது ஏன்?
வி.சி., கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை:
‘சமத்துவத்தை உருவாக்க, பொது மயானங்கள் வேண்டும்’ என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக, 2014-ல் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், ‘பொது மயானங்களை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்’ என கூறியுள்ளது. உயர் நீதிமன்றம் கூறியபடி, தமிழகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்த, பொது மயானங்களை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘ஊருக்கு ஊர் சமத்துவபுரம் கட்டினோம்’னு பெருமை அடிச்சுக்கிற, தி.மு.க., அரசு இந்த பிரச்னையை கண்டுக்காதது ஏன்?
தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி:
முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையின் போது படுகாயமடைந்த, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அனுசுயாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது. இது குறித்து, டி.ஜி.பி.,யிடம் அவர் புகார் தெரிவித்திருக்கிறார். அதன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கா விட்டால், காங்கிரஸ் நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும்; வேடிக்கை பார்க்காது.
இந்த வழக்கில், விடுதலையான குற்றவாளியை முதல்வர் கட்டிப் பிடிக்கும் போது மட்டும் வேடிக்கை பார்க்கும்… அப்படித்தானே!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்