வகுப்பறையில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் இஸ்லாமிய மாணவரை தீவிரவாதி என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்து வருகின்றனர். அப்போது வகுப்பில் பாடம் எடுத்து கொண்டிருந்த பேராசிரியர் நீல நிற சட்டை அணிந்திருந்த இஸ்லாமிய மாணவரை, தீவிரவாதி என்ற அர்த்தத்தில் பேசினார்.
ஆசிரியரின் இந்த கருத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவன், இத்தனை பேருக்கு முன்னாள் அவ்வாறு எப்படி அழைக்கலாம். இது வகுப்பறை நீங்கள் ஒரு ஆசிரியர், இப்படி பேசலாமா என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
உடனடியாக சுதாரித்த ஆசிரியர், நீ சிறுவன் எனது மகன் போன்றவன். எனவே ஜாலியாகத்தான் அப்படி அழைத்தேன் என்றார். அதற்கு அந்த மாணவன், இது எப்படி ஜாலியாகும் என்று கேட்டார்.
ஒரு முஸ்லிமாக நாள்தோறும் இப்படிதான் நான் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஒருவரின் பெயரை வைத்து எப்படி தீவிரவாதி என்று கூறுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார் மாணவன்.
ஆசிரியர் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். நீங்கள் மன்னிப்பு கேட்பதால் எதுவும் மாறாது. நீங்கள் எப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர் என்பதை இது பிரதிபலிக்கிறது என்று மாணவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த ஆசிரியருக்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையே அந்த பேராசிரியருக்கு வகுப்புகள் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
newstm.in