"எங்க தலைவன் முகம் எங்க பிராண்டு!"– இறந்தும் பலரை வாழவைக்கும் புனித் ராஜ்குமார்!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் புனித் ராஜ்குமார். ‘பவர் ஸ்டார்’ எனவும், ‘அப்பு’ எனவும், ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர், மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மகன். 2021 அக்டோபர் மாதம் 29-ந் தேதி புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இறந்து, கர்நாடக மக்களை சோகத்தின் உச்சத்துக்கே அழைத்துச்சென்றார். திரையுலகில் ‘ஸ்டார்’ ஆக மட்டுமல்லாமல், வெளியுலகுக்கு பெரிதாகத் தெரியாமல், தனது அறக்கட்டளைகள் வாயிலாக மக்களுக்குப் பல வகைகளில் உதவி செய்து, பலரை வாழ வைத்து வந்தார்.

நந்தினி பிராண்டு அம்பாஸிடராக புனித் ராஜ்குமார்

பிராண்டு அம்பாசிடர்!

நாட்டின் பெரும் பால் நிறுவனத்தின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பு, நந்தினி என்ற பிராண்டு பெயருடன், 22,000 கிராமங்களில் 24 லட்சம் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து, பால் மற்றும் பால் சார்ந்த பல மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்கிறது. இந்தப் பொருள்களின் விற்பனையை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு உதவவும், இந்த நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடராகவும் புனித் ராஜ்குமார் இருந்தார். அவர் இறந்தபின் அவரை கௌரவிக்கவும், நினைவுகூரவும் புனித் ராஜ்குமார் படம் அச்சிடப்பட்ட, நந்தினி பிராண்டு பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன.

பால் பாக்கெட்டில் புனித் ராஜ்குமாரின் படம்

புனித் ராஜ்குமார் பெயரில் ரோடு!

இவரின் சேவைகளைப் பாராட்டிய கர்நாடக அரசு, கடந்த ஆண்டு, பெங்களூரு நகரின் மத்தியிலுள்ள, மைசூர் – பன்னர்கட்டா ரோட்டில், 12 கி.மீ தொலைவுக்கான சாலையை, ‘ஸ்ரீ டாக்டர் புனித் ராஜ்குமார் ரோடு’ எனப் பெயரிட்டதுடன், அவருக்கு கர்நாடக ரத்னா விருதையும் வழங்கியது. கடந்த 1–ம் தேதி நடந்த கர்நாடக மாநிலம் உதயமான தினமான ‘கர்நாடகா ராஜ்யோத்சவா’ தினத்தில் அவர் நினைவுகூரப்பட்டார்.

எப்போதும் உடற்பயிற்சி செய்து ‘பிட்’டாக இருப்பவர், 46 வயதில் உயிரிழந்த சோகம், இன்னமும் கர்நாடக மக்களை விட்டு விலகவில்லை.

புனித் ராஜ்குமார்

அவர் இறந்து ஓராண்டு கடந்து, அக்டோபர் மாதம் முதலாம் ஆண்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும், கர்நாடக மக்களும், ரசிகர்களும் அவர் இறந்தது முதல் இன்று வரையில், அவரது இழப்பை மறக்கமுடியாமல், அனுதினமும் அவரது பெயரில் பல நல்ல காரியங்களைச் செய்து வருகின்றனர்.

பெங்களூரு நகரில் திரும்பிய திசையெல்லாம் ஆட்டோக்களில் புனித் ராஜ்குமாரின் புகைப்படமும், கர்நாடக மாநிலக் கொடியையும் காண முடிகிறது. பெங்களூர் நகரின், 60 சதவிகித இடங்களில் புனித் ராஜ்குமாரின் பேனர்களைக் காணமுடிந்தது.

ராஜ்குமார் சிலை அருகே புனித் ராஜ்குமார் பேனர்.

‘எங்க தலைவன் முகம் எங்க பிராண்டு!’

இதுகுறித்து ஆட்டோ டிரைவர்களிடம் பேசினோம், கன்னடம் கலந்த தமிழில் நம்மிடம் பேசிய அவர்கள், ‘‘அப்புண்ணா கர்நாடக மக்களுக்காக என்னென்ன நல்லதெல்லாம் செய்திருக்காருன்னு, அவரு இறந்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது. மக்கள் மேல ரொம்ப அன்பு வெச்சிருந்த எங்க பவர் ஸ்டாரோட புகழ் மக்களுக்குத் தெரியணும்னு அவரைத் தினமும் கொண்டாடுறோம். பெங்களூருல இருக்கிற, 80 சதவிகிதம் ஆட்டோவுல கடவுள் படத்துக்குப் பக்கத்துல, ‘அப்பு’ண்ணா போட்டோதான் வெச்சிருக்கோம்.

கர்நாடகக் கொடியுடன், ஆட்டோவில் புனித் ராஜ்குமார் படம்

எங்க (கர்நாடக மாநிலத்தின்) கொடி, அவரோட போட்டோ வெச்சுட்டு, வாரம் ஒரு முறை ஆட்டோ பேரணி நடத்துறோம், அன்னதானம் கொடுக்கறோம், நீர் மோர் கொடுக்கறோம். அவரு உயிரோட இருக்கற வரைக்கும் அவரைப்பத்தி நிறைய பேருக்குத் தெரியல; இப்ப அவரைப்பத்தி எல்லோரும் தெரிஞ்சுக்கட்டும்ன்னு இதெல்லாம் செய்றோம். சிலர் அவரு பேருல ‘ஹார்ட் அட்டாக், கேன்சர்’ பத்தியெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துறாங்க, ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவின்னு, பல உதவிகள் செய்யுறாங்க. எப்பவுமே, ‘அப்பு’ண்ணா எங்க தலைவன், எங்க அடையாளம், கர்நாடகாவோட பிராண்டு’’ எனக் கூறி, மகிழ்ச்சியில் நெகிழ்ந்தனர்.

புனித் ராஜ்குமார் உடல் மட்டும்தான் மரணித்தது; இன்னமும் கர்நாடக மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவரின் பெயரால் செய்யப்படும் உதவிகளால், புனித் ராஜ்குமார் இறந்தும் வாழவைக்கிறார் பலரை!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.