மெஸ்சியை கார் ஏற்றி கொன்று விடுவேன்; மெக்சிகோ குத்து சண்டை வீரர் மிரட்டல்

மெக்சிகோ சிட்டி,

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் கடந்த 2 நாட்களுக்கு முன் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அப்போது அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி உலக கோப்பை வரலாற்றில் தனது 8-வது கோலை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் உலக கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடம்பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பட்டியலில் அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா முதல் இடத்தில் (10 கோல்கள்) உள்ளார்.

அர்ஜென்டினா தொடக்க போட்டியில் சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்த நிலையில், நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற, மெக்சிகோவுக்கு எதிரான போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருந்தது.

இந்த வெற்றிக்கு பின்னர் உடைமாற்றும் அறையில் வீரர்கள் பாட்டு பாடி, நடனம் ஆடி மகிழ்ச்சியை கொண்டாடினர். ஆனால், மெஸ்சி செய்த விசயம் மெக்சிகோவின் குத்து சண்டை வீரர் கேனலோ ஆல்வாரெஜ்ஜுக்கு ஆத்திரம் கிளப்பி உள்ளது.

இதுபற்றி ஆல்வாரெஜ் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நமது ஜெர்சியை பயன்படுத்தி மெஸ்சி தரையை துடைத்துள்ளார். இதனை பார்த்தீர்களா நண்பர்களே? மெஸ்சியை நான் எங்கேயாவது பார்த்தேன் என்றால், அவரை வாகனம் ஏற்றி கொன்று விடவேண்டாம் என்று அவர் கடவுளிடம் வேண்டி கொள்ளட்டும் என மிரட்டலாக தெரிவித்து உள்ளார்.

மெஸ்சியின் அந்தஸ்துக்கு அவர், மெக்சிகோவின் கொடி மற்றும் சட்டையை மதிக்க வேண்டும். அர்ஜென்டினாவை நான் மதிப்பதுபோல், மெக்சிகோவை அவர் மதிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.