இந்தியாவுடனான உறவில் தலையிடக் கூடாது சீனா எச்சரித்ததாக அமெரிக்க ராணுவம் தகவல்| Dinamalar

வாஷிங்டன், ‘இந்தியாவுடனான தங்களுடைய உறவில் தலையிடக் கூடாது’ என, சீன ராணுவம் எச்சரித்ததாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம் நாட்டின் கிழக்கு லடாக்கில், ௨௦௨௦ மே மாதத்தில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை, நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன.

பல சுற்று பேச்சுகளுக்குப் பின், இரு நாடுகளும் சில இடங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற்றன.

அதே நேரத்தில் பல இடங்களில் இரு நாட்டு ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ தன் ஆண்டு அறிக்கையை அந்நாட்டின் பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது. இதில், இந்தியா – சீனா இடையேயான பிரச்னை குறித்து கூறப்பட்டு உள்ளதாவது:

தன் நாட்டின் எல்லையை பாதுகாப்பதற்காக, இந்தியாவுடனான எல்லையில் படைகளை நிறுத்தி வைத்துள்ளதாக சீனா கூறி வருகிறது.

தன் எல்லையில் இந்தியா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக சீனா கூறியுள்ளது.

எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டால், தங்களுடைய படைகளையும் விலக்கிக் கொள்வதாக இரு நாடுகளும் பரஸ்பரம் கூறி வருகின்றன. இதனால், படைகளை விலக்கிக் கொள்வதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், சீன ராணுவம் தன் எல்லையில் பல்வேறு கட்டுமானப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்த எல்லைப் பிரச்னையால், அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் சீனா உள்ளது.

இதனால், ‘இந்தியாவுடனான தன் உறவு தொடர்பான பிரச்னையில் தலையிடக் கூடாது’ என அமெரிக்காவுக்கு சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுத உற்பத்தி

அமெரிக்க ராணுவம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:அடுத்த ௧௦ ஆண்டுகளில், சீனா தன் ராணுவ பலத்தை அதிகரிப்பதுடன், நவீனப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. தற்போது சீனாவிடம் ௪௦௦ அணு ஆயுதங்கள் உள்ளன. வரும் ௨௦௩௫க்குள், அவற்றை ௧,௫௦௦ ஆக உயர்த்த அந்நாடு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.