சீனாவில் விநோதம்! சிறுமியின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடி: அதிர்ச்சி அடைந்த பெற்றோர்

பீஜீங்,

உலகில் பெரும்பாலான மனிதர்களுக்கு வினோதமான பழக்கங்கள் இருப்பது வழக்கம். இரும்பை திண்பது, பல்பை விழுங்வது, முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக உட்கொள்ளுதல், மண்ணை திண்ணுதல், இதற்கு காரணம் ஒரு பொருள் மீதான ஈர்ப்பே ஆகும். அந்த வகையில், சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தலைமுடியையே பிடுங்கி சாப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிறுமி ஒருவரை அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர். அவர் உணவு உண்ண முடியாமல் இருந்திருக்கிறார். மேலும் அவரது தலை வழுக்கையாய் இருந்திருக்கிறது. சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்திருக்கிறார்கள். சோதனையின் முடிவில் சிறுமியின் வயிற்றுக்குள் ஏராளமான தலைமுடி இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் இருந்து தலைமுடியை அகற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு சிறுமியின் வயிற்றுக்குள் முடி இருந்ததால் அந்த சிறுமியால் உணவு உட்கொள்ள முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் வயிற்றுக்குள் இருந்து முடியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார்கள். எதனால் இப்படி நேர்ந்தது என்பது குறித்து ஆராய்ந்த போதுதான் பல திடுக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளது.

அந்த சிறுமி தனது தலைமுடியை தானே பிடுங்கி சாப்பிட்டிருந்திருக்கிறார். இதனால் அவரது தலை வழுக்கை ஆகியுள்ளது. தனது தலைமுடியை தானே பிடுங்கி சாப்பிட்டதால் வயிற்றுக்குள் சென்ற தலைமுடி செரிமானம் ஆகாமல் வயிற்றை அடைத்துக் கொண்டு இருந்துள்ளது. இதனால் உணவு உள்ளே செல்ல வழியில்லாமல் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். ஏன் அந்த சிறுமி தனது தலைமுடியை தானே சாப்பிட்டிருக்கிறார் என்பதற்கும் மருத்துவர்கள் காரணத்தை கண்டறிந்திருக்கிறார்கள்.

ஷான்சி இமாகாணத்தை சேர்ந்த அந்த சிறுமிக்கு ‘பிகா’ என அழைக்கப்படும் விநோத பழக்கம் இருந்துள்ளது. அதாவது இந்தப் பழக்கம் உள்ளவர்கள் அசாதாரணமான, சாப்பிடக் கூடாத பொருட்களை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் அழுக்கு, காகிதம், களிமண் போன்ற பொருட்களை விரும்பி உண்ணுவார்கள். பொதுவாக இந்த மனநிலை கர்ப்பிணி பெண்களுக்கு அதிகம் ஏற்படும். அதிலும் குறிப்பாக அந்த சிறுமிக்கு டிரிகோடிலோமேனியா என்கிற தனது தலைமுடியை பிய்த்து தானே உண்ணும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அப்பா,அம்மா வெளியூரில் வேலை பார்த்து வருவதால் சிறுமி தனது தாத்தா- பாட்டி கண்காணிப்பில் இருந்துள்ளார். கண்காணிக்க யாரும் இல்லாததால் சிறுமிக்கு இந்தப் பழக்கம் இருந்ததை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆபத்தான நிலைக்கு சிறுமி தள்ளப்பட்ட பிறகே இந்த விநோத பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த முடி அகற்றப்பட்ட பிறகு சிறுமிக்கு மற்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறுமிக்கு இருக்கும் அந்த விநோத பழக்கவழக்கத்தில் இருந்து சிறுமியை மீட்பதற்கான உளவியல் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.