பள்ளி மாணவி கர்ப்பம் 2 வாலிபர்கள் கைது
உத்தர கன்னடா : பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய இரண்டு வாலிபர்கள் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
உத்தர கன்னடா, கும்டா அருகே உள்ள கோனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகில், 21, இவரது நண்பர், ஹள்ளி கொப்பாவை சேர்ந்த முக்ரி, 20.
இருவரும் கும்டாவில் தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை சில மாதங்களுக்கு முன், ஆட்டோவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்தனர்.
சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அழைத்து சென்று பலாத்காரம் செய்தனர்.
இதில், மாணவி கர்ப்பமடைந்தார். மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.
இதில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மகளிடம் விசாரித்தபோது, பலாத்கார சம்பவம் வெளியில் தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கும்டா போலீசில் புகார் செய்தனர். நேற்று இரண்டு வாலிபர்களையும், ‘போக்சோ’ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
வானுார் : ஆரோவில் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரோவில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது, ஸ்ரீராம் நகரில் கஞ்சா விற்ற புதுச்சேரி பூமியான்பேட்டை சங்கர், 32; லாஸ்பேட்டை பரத், 27; கோரிமேடு ஈஸ்வரன், 26; ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
பெண் கொலை குறித்து தோட்டங்களில் விசாரணை
உடுமலை: உடுமலை அருகே, முட்புதரில் மர்மமான முறையில், பெண் கொலை செய்யப்பட்டது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி நாகவேணி, 46. நேற்று முன்தினம், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், புதுப்பாளையம் அருகே முட்புதரில், ரத்தகாயங்களுடன், நாகவேணி இறந்து கிடந்தார். சம்பவ இடத்தில், கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன், கோமங்கலம் போலீசார், பெண் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த இடம், திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்ததால், நேற்று குடிமங்கலம் போலீசாரும் இணைந்து விசாரணையை துவக்கினர். பிரேத பரிசோதனைக்காக நாகவேணியின் உடல், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் சுற்றுப்பகுதி கிராமங்களில், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி. எனவே, ஏ.நாகூர் – சீலக்காம்பட்டி, புதுப்பாளையம் கிராம இணைப்பு ரோட்டில், மர்மநபர்கள் நடமாட்டம் இருந்ததா என்பது குறித்து, அப்பகுதியிலுள்ள தோட்டத்து சாளைகளில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சுற்றுப்பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளில் தங்கி பணியாற்றும், பிற மாநில தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
கால்நடைகள் மேய்ச்சலுக்காக சென்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதால், கிராமப்புறங்களில், போலீசார் குறிப்பிட்ட இடைவெளியில், ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமனார் வாங்கிய கடனுக்கு மருமகனை கடத்திய கும்பல்
பொம்மனஹள்ளி : மாமனார் வாங்கிய பணத்துக்காக, கடன் கொடுத்தவர்கள் மருமகனை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, பொம்மனஹள்ளியை சேர்ந்தவர் லட்சுமண் ரெட்டி, 60. இவர் ஸ்வரூப், 40 என்பவரிடம் சில மாதங்களுக்கு முன், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதில், 2 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டார். மீதம் 3 லட்சம் ரூபாயை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில், லட்சுமண் ரெட்டியின் மருமகன் ராஜசேகர், 30 என்பவரை, ஸ்வரூப் தன் நண்பர்களுடன் கடந்த 26ம் தேதி கடத்தி சென்றார். பின் அவரது அண்ணன் ராமச்சந்திராவுக்கு போன் செய்து, 50 ஆயிரம் ரூபாய் தருமாறு ‘கூகுள் பே’ மூலம் பெற்று கொண்டனர்.
ஆனாலும் விடுவிடுக்கவில்லை. நேற்று முன்தினம் மாமனார் லட்சுமண ரெட்டிக்கு போன் செய்து, ‘மீதம் 2.50 லட்சம் ரூபாயை கொடுத்தால்தான், உங்கள் மருமகனை விடுவோம்’ என கூறி உள்ளனர்.
பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று மாமனார் லட்சுமண ரெட்டி, அண்ணன் ராமச்சந்திரா ஆகிய இருவரும் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, கடத்தப்பட்ட ராஜசேகர் மற்றும் கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதிப்பெண் குறைவு மாணவி தற்கொலை
உடுப்பி : தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், மனமுடைந்த பி.யு., மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடுப்பி அருகே உள்ள பெர்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ் மென்டன், 46. இவரது மகள் தீப்தி, 17.
இவர் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்ததால், ஹெப்ரியிலுள்ள தனியார் பி.யு., கல்லுாரியில் கட்டணம் இன்றி சேர்க்கப்பட்டார். சமீபத்தில் பி.யு., பருவ தேர்வு நடந்தது.
இதில் அவர் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தார்.
இதனால் பிரின்சிபால், அவரை அழைத்து கண்டித்தார். மேலும் அபராதம் விதிப்பதாக எச்சரிக்கை விடுத்தார். மனமுடைந்த மாணவி, நேற்று முன்தினம் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் சமாதானப்படுத்தினர்.
ஆனாலும், அன்று இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவிலில் முஸ்லிம் கடைகள் எதிர்த்த ஹிந்து பிரமுகர்கள் கைது
வி.வி.புரம் : பெங்களூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியா கோவில் வெள்ளி ரத திருவிழாவில், முஸ்லிம் கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்த 25க்கும் மேற்பட்ட ஹிந்து பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு வி.வி.புரத்தில் உள்ள சுப்பிரமணியா கோவிலில் நேற்று வெள்ளி தேர் திருவிழா நடந்தது. இத்திருவிழாவில் ஆண்டுதோறும் ஹிந்துக்கள் மட்டுமின்றி, பிற மதத்தவரும் கடைகளை வைப்பது வழக்கம்.
இந்த முறை முஸ்லிம் கடைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர் சார்பில் பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத்திடம் மனு அளிக்கப்பட்டது.
போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே திருவிழாவின் போது, முஸ்லிம் கடைகளில் யாரும் பொருட்களை வாங்க கூடாது என ஹிந்து அமைப்பினர் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்திருந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் ஹனுமந்தநகர், பசவனகுடி, கனகபுரா, வி.வி.புரம் போலீசார் 25க்கும் மேற்பட்ட ஹிந்து பிரமுகர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
காதலியை மணக்க கொள்ளை: ஏ.டி.எம்., காவலாளி கைது
வில்சன் கார்டன் : வேலை செய்த ஏ.டி.எம்.,மில் 19 லட்சம் ரூபாய் கொள்ளைடியத்து சென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.,மில் காவலாளியாக பணியாற்றியவர், அசாம் மாநிலத்தை சேர்ந்த திபோங்கர் சோமசுந்தர், 27.
இவர் ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் வைக்க வரும் ஊழியர்களுடன் நல்ல பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். அவர்களிடம் இருந்து பாஸ்வேர்டையும் கேட்டு தெரிந்து கொண்டார்.
கடந்த 17ம் தேதி, பாஸ்வேர்டு மூலம் ஏ.டி.எம்.,மில் இருந்து 19 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு தலைமறைவானார். வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரில், காவலாளியை போலீசார் தேடி வந்தனர்.
விசாரணையில், அவர் அசாமின் கவுஹாத்தியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற வில்சன் கார்டன் போலீசார், திபோங்கரை கைது செய்து அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 14.20 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘காவலாளி திபோங்கர், ஒரு பெண்ணை காதலித்தார். அவரை திருமணம் செய்ய பணம் தேவைப்பட்டதால், வேலை செய்த ஏ.டி.எம்.,மிலேயே பணத்தை கொள்ளையடித்து சொந்த ஊருக்கு சென்றார்.
‘அங்கு ஒரு ஹோட்டலை துவங்கி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து திருமணம் செய்யலாம் என முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த போது போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்’ என்றார்.
சிறுமியை பெட்டியில் பூட்டிய சித்தி மீது வழக்கு
முசாபர்நகர் : உத்தர பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பெட்டிக்குள் வைத்து பூட்டிய சித்தி மீது, போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, முசாபர் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி ராதிகாவை காணவில்லை என உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் ராதிகாவின் வீட்டிற்கு விரைந்தனர்.
அங்கு தேடியதில் சிறுமி பெட்டி ஒன்றில் பூட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு மயக்கம் தெளிய வைத்த போலீசார் விசாரித்த போது, தன்னை அப்பாவின் இரண்டாவது மனைவி பெட்டிக்குள் வைத்து பூட்டியதாக சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் சித்தி ஷில்பி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஷில்பி கர்ப்பமாக இருப்பதால் போலீசார் அவரை கைது செய்யவில்லை.
ராதிகாவின் தந்தை சோனு சர்மா, தன் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் ஷில்பியை மணந்துள்ளார்.
அப்பா மற்றும் சித்தி ஷில்பியுடன் ராதிகா வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
எலியை கொன்றவர் மீது போலீசார் வழக்கு
பதாயு : எலி வாலில் கல்லைக்கட்டி சாக்கடையில் வீசி கொன்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர், எலி வாலில் கல்லைக் கட்டி அதை சாக்கடையில் வீசி எறிந்தார். கல்லின் கனத்தினால் மேலே வரமுடியாமல் எலி தண்ணீரில் மூழ்கி துடிதுடித்து இறந்தது.
இறந்த எலியை சாக்கடையில் இருந்து எடுத்த விலங்குகள் நல ஆர்வலர் விகேந்திர சர்மா, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மனோஜ் குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இறந்த எலியின் உடல், பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து ஆய்வு முடிவு வந்ததும், மனோஜ் குமார் மீதான நடவடிக்கை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என கூறப்படுகிறது.
எலி, விலங்குகள் பட்டியலில் சேராது என கூறப்பட்டதால், மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்ய, போலீசார் முதலில் மறுத்தனர்.
ஆனால், எலி விலங்குகள் பட்டியலை சேர்ந்தது என மாவட்ட கால்நடை அதிகாரி உறுதி அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
போலி பாஸ்போர்ட் பெண் பயணி கைது
சென்னை : போலி பாஸ்போர்ட் வாயிலாக வங்கதேசம் செல்ல முயன்ற, அந்த நாட்டைச் சேர்ந்த பெண் பயணி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து, வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு, யு.எஸ்., பங்காளா ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் மாலை செல்ல இருந்தது. இதில் பயணிக்க, ரீனா பேகம், 37, என்ற பெண், இந்திய பாஸ்போர்ட்டுடன், சுற்றுலா விசாவுடன் வந்தார்.
அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது பாஸ்போர்ட் போலியானது என தெரிய வந்தது. இதையடுத்து, ரீனா பேகத்திடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
அதில், வங்கதேசத்தில் இருந்து, மேற்கு வங்கம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, போலி பாஸ்போர்ட் வாங்கியதாக தெரிவித்துள்ளார். மேல் விசாரணைக்காக, மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரீனா பேகம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
வங்கதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவர் போலி பாஸ்போர்ட் வாயிலாக, கடந்த வாரம் மலேஷியாவில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில், அவர் கைது செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்