பொறந்தால் இறந்துதானே ஆகணும் : வதந்திக்கு நடிகை லட்சுமியின் ‛கூல்' பதில்

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மற்றும் ஹிந்தி சினிமாவிலும் நூற்றக்கணக்கான படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை லட்சுமி. கதாநாயகியாக மட்டுமல்லாது பின்னாளில் குணசித்ர நடிகையாகவும் நடித்தார். தற்போதும் ஓரிரு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இவர் இறந்துவிட்டதாக காலைமுதலே தவறான செய்தி பரவியது. இதுபற்றி லட்சுமி தரப்பில் விசாரித்தபோது அது வதந்தி என தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு நிறைய பேரிடமிருந்து அழைப்புகள் வர லட்சுமியே ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : ‛‛வணக்கம், நான் லட்சுமி பேசுகிறேன். காலையில் இருந்து என்னை பலரும் போனில் அழைத்து கொண்டிருக்கிறார்கள். என்ன இன்னைக்கு நமக்கு பிறந்தநாள் கூட இல்லையே என்று யோசித்தேன். கடைசியில பாத்தா நடிகை லட்சுமி இறந்துட்டாங்கனு செய்தி போய்கிட்டு இருக்காம். ஹை! பொறந்தால் இறந்துதானே ஆகணும். இதுகெல்லாம் நான் பயப்பட போறது இல்ல, கவலப்பட போறது இல்ல. ஆனால் வேலை வெட்டி இல்லாதவுங்க மெனக்கெட்டு இப்படி பரப்புறாங்கனு நினைக்கும்போது என்னடா இது திருந்தவே மாட்டாங்களா என எண்ண தோன்றுகிறது. இப்படி ஒரு செய்தி வந்ததும் பலரும் அக்கறையுடன் விசாரித்தார்கள். உங்களின் அன்பை பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. இறைவன் அருளால், அனைவரின் ஆசீர்வாதத்துடன் சந்தோஷமாக நலமாக உள்ளேன். உங்களிடம் பேசும் இந்த சமயத்தில் நான் கடையில் ஷாப்பிங் செய்து வருகிறேன். எல்லோருக்கும் என் வாழ்த்துகள், வணக்கங்கள்.

இவ்வாறு லட்சுமி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.