புதுடில்லி : ‘விலங்குகளை கொடுமைப்படுத்துவதை சட்டம் தடை செய்யும் போது, கொடுமையை நிலைநிறுத்தும்படி சட்டத்தை திருத்த முடியாது’ என, ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கில் மனுதாரர்கள் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதங்களை முன்வைத்தது.
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து 2014ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் முழுதும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதி அளிக்கும் அவசர சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து அவசர சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதை எதிர்த்து, ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மனுவை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
சமீபத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஜல்லிக்கட்டு விளையாட்டு, தமிழகத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் மத சடங்குகளுடன் தொடர்புடையது. இதில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை’ என, தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜரானார். அவர் வாதிடுகையில், ”மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் வாயிலாக அந்த சட்டத்துக்கு வேறு சாயம் பூசும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. விலங்குகளை கொடுமைப்படுத்துவதை சட்டம் தடை செய்யும் போது, கொடுமையை நிலைநிறுத்தும்படி சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாது,” என, அவர் வாதிட்டார்.
வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement