யாருக்கு முடிவுரை? நாளை 8 மணிக்கு தொடங்கும் குஜராத் முதல் கட்ட வாக்குபதிவு

Gujarat Assembly Election 2022: குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (டிசம்பர் 1) நடைபெறுகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் 2022 முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர்  5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை வாக்குபதிவு நடைபெறும் பட்சத்தில் வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பும் பணி துரிதமாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தயார் செய்யும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான தீவிரமான உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் நவம்பர் 29 செவ்வாய் அன்று முடிவுக்கு வந்தது.தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சௌராஷ்டிரா பிராந்தியங்களில் இடம்பெற்றுள்ள 19 மாவட்டங்களில் உள்ள 89 இடங்களுக்கு நாளை வாக்குபதிவு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. 89 இடங்களில் 14 பழங்குடியினருக்கும் 7 இடங்கள் தலித்துகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணிக்கு முடிவடையும். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் கார்கே மற்றும் ராகுல்காந்தி உட்பட பலர் வாக்கு சேகரிப்பில் கலந்துக்கொண்டனர். ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முதல் முறையாக குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022 இல் களம் இறங்கியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, குஜராத் மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக முக்கியப் போட்டியாளராக இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் நுழைவு குஜராத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே இருந்த போட்டி, இந்தமுறை மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை: 182 
முதல் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 1
2ம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 5
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 8

முதற்கட்ட வாக்குபதிவு வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்:
மொத்த வாக்காளர்கள்: 2,39,76,670
ஆண்கள்: 1,24,33,362 
பெண்கள்: 1,15,42,811 
மூன்றாம் பாலினத்தவர்கள்: 497 

முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும் தொகுதிகள் எண்ணிக்கை: 89
முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும் மாவட்டங்களின் எண்ணிக்கை: 19
வாக்குபதிவு தொடங்கும் நேரம்: காலை 8 மணி
வாக்குபதிவு முடிவடையும் நேரம்: மாலை 5.30 மணி

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி முதல் கட்ட தேர்தலுக்கு 25,430 வாக்குச் சாவடிகளை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 16,416 கிராமப்புறங்களிலும், 9,014 நகர்ப்புறங்களிலும் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.