இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டம்

இந்தியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எமது நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்களை மாற்றுவது பாரிய சவாலாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்தில் கொண்டு குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் முதல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேசைகளை அதிகரிப்பது குறித்து இந்தியாவுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையின் சுற்றுலாத்துறையின் பிரதான இலக்கு ஐரோப்பா என்பதுடன், விசேடமாக ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதற்கான திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு இதுவரையிலும் வராத நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதும் எமது இலக்கு ஆகும். குறிப்பாக தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் இதில் அடங்கும். மேலும், அவுஸ்திரேலியா போன்ற நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சாகச செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவதால், இது தொடர்பான இடங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 8 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிரபார்த்து உள்ளோம். இதுவரை சுமார் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதே எமது இலக்காகும்.

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பெற்றுள்ள கடன் சலுகைகள் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையும் என்பதால், இது தொடர்பாக வங்கிகளுடன் கலந்துரையாட உள்ளோம்.

இதேவேளை, நாட்டின் 49 பிரதேசங்களை சுற்றுலா வலயங்களாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே நாட்டின் சுற்றுலாத்துறையை மாத்திரம் பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தாம் நம்பிக்கை கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை தற்போது ஓரளவு தலைநிமிர்ந்து வருவதால், நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டங்களையும் எதிர்ப்புக்களையும் முன்னெடுக்குமாறும் அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.