கோவை மாவட்டத்தில் பாட்டு பாடி ரேஷன் கடை பெண் ஊழியரை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். அப்பொழுது காந்திநகர் பகுதியை சேர்ந்த முருகசாமி (34) என்பவர் எடை போடும் வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில் முருகசாமி மது அருந்திவிட்டு வந்து வேலைக்கு வந்ததால் இளம்பெண் அவரை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகசாமி சம்பவத்தன்று இளம்பெண் வேலைக்காக ரேஷன் கடைக்கு நடந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்து உள்ளார்.
மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும், பாட்டுப்பாடியும் கிண்டல் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இளம்பெண் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணை கிண்டல் செய்த முருகசாமியை கைது செய்தனர்.