சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன.

அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர். சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சசி தரூர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498-ஏ, 306 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசிதரூர் எம்.பி-யை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசிதரூர் எம்.பி-யை விடுவித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் போலீசார் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.