புதுடில்லி, ‘ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால்தான் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுகிறதா, இது பாரம்பரியமான போட்டி என்பதற்கு ஆதாரம் உள்ளதா’ என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம், ௨௦௧௪ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் மிகப் பெரும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக தமிழக சட்டசபையில், ௨௦௧௭ல் அவசர சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும், ‘பீட்டா’ எனப்படும் பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
இந்த வழக்கை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில், ‘ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்தது. இதில் விலங்குகளுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்கப்படவில்லை’ என, தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:
நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுவதற்காகவே இந்தப் போட்டி நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நாட்டு மாடுகள் பராமரிப்புக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு உள்ளது?
இது கலாசார, பாரம்பரிய விளையாட்டு என்று கூறப்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக பல பிரிவுகள் உள்ளன. ஆனால், அவை எதுவும் நடைமுறைபடுத்தப்படவில்லை. அப்படி இருக்கையில் இந்த சட்டம் இருந்து என்ன பயன்?
இவ்வாறு அமர்வு கூறியது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டதாவது:
ஜல்லிக்கட்டு என்பது காளைகளின் வீரம் மற்றும் வலிமையை பறைசாற்றவே நடத்தப்படுகிறது.
பத்திரிகைகளில் வந்த சில செய்திகளின் அடிப்படையில், ‘பீட்டா’ நிறுவனம் தயாரித்துள்ள அறிக்கையை ஆதாரமாக வைத்து தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த அறிக்கையில் எந்த உண்மையும் இல்லை.
கடந்த, ௨௦௧௭ல் இருந்து, ௨௦௨௨ வரை இதுவரை ஜல்லிக்கட்டால் யாரும் பாதிக்கப்பட்டதாக வழக்குகள் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
வரும், ௬ம் தேதி தமிழக அரசின் சார்பில் வாதங்கள் தொடரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்