”தங்கம் வாங்கிட்டேன்; காட்டுவதற்கு அப்பா இல்லையே” – தமிழக வீராங்கனைக்கு இப்படியொரு துயரமா!

நியூசிலாந்து காமன்வெல்த் போட்டியில் தங்க மெடல் வாங்கிய இளம் பளுதூக்கும் வீராங்கனை, அந்த மெடலை சொந்த ஊருக்கு வந்து தனது தந்தையிடம் காட்ட இருந்தநிலையில், அவர் உயிரிழந்த செய்திதான் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் கேட்பவர்களையும், பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்து ஆக்லாண்டில் நடந்து வருகிறது. இதில் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள் – வீராங்கனைகள் சென்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வீரர்கள் – வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி தொடங்கிய போட்டிகள், டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்கிறது.
தங்கம் வென்ற தமிழக வீராங்கனை லோகப்பிரியா!
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 11 பேரில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் – வீராங்கனைகள் மெடல் அடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்ற இருவரில் மாஸ்டர் பிரிவில் 490 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார் பயிற்சியாளரான பட்டுக்கோட்டை ஜிம் ரவி. இவரிடம் பயிற்சி பெற்ற எம்.பி.ஏ. பட்டதாரியான லோகப்பிரியா (வயது 22) 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
image
5 நிமிடம் கூட நீடிக்காத மகிழ்ச்சி!
தங்கம் வென்ற மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. ஆமாம். பளுதூக்கும் வீராங்கனை லோகப்பிரியா வெற்றிக்கனி பறிக்கும் வரை காத்திருந்த மாஸ்டர், அனைவரது பாராட்டையும் பெற்று தேசியக் கொடியோடு மெடல் வாங்கிய லோகப்பிரியா கீழே இறங்கும் போது சொன்ன தகவல் அப்படியே அவரை நொறுங்கிப் போக வைத்தது.. அவரிடம் அவரது மாஸ்டர் கூறியதாவது, “உன் தந்தை ஊரில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக உன் சித்தப்பா தகவல் சொன்னார்” என்றதும் வெற்றியின் மகிழ்ச்சியை கொண்டாட நினைத்த வீராங்கனை லோகப்பிரியா, தந்தையை இழந்த துக்கத்தில் கதறி துடித்துக் கொண்டிருக்கிறார்.
கண்ணீர் விட்டு கதறிய வீராங்கனை லோகப்பிரியா!
தங்கம் வாங்கனும், சாதிக்கனும் என்று சொல்லிக் கொண்டிருந்த தந்தை, தான் தங்கம் வாங்கிதைப் பார்க்க கூட இல்லாமல் போய்விட்டாரே என கண்ணீர் வடிய கதறியது அனைவர் மனதையும் கரையவைத்தது. இதையடுத்து அவரை ஆறுதல் கூறி அறையில் தங்க வைத்துள்ளனர்.
கொண்டாட வேண்டிய தருணத்தில் தந்தையை இழந்த சோகம்!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வமுத்து மகள் தான் லோகப்பிரியா. இவருடன் 2 சகோதரிகள் உள்ளனர். தந்தை சில வருடங்களாக சொந்த ஊரில் தங்கிவிட, தன் மகள் சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியோடு தாய் பட்டுக்கோட்டையில் ஒரு பொதுக்கழிவறையில் வசூல் செய்கிறார்.
வீராங்கனை பேசிய வீடியோவை காண; https://twitter.com/PTTVOnlineNews/status/1598309482085289984
இத்தனை ஏழைக் குடும்பத்தில் பிறந்து பயிற்சியாளர் ரவியின் தொடர் பயிற்சியால் பளுதூக்குவதில் பல மெடல்களை வென்ற வீராங்கனை லோகப்பிரியா, இன்று காமன்வெல்த் போட்டியிலும் வென்று பெருமை சேர்த்திருக்கிறார். இந்த வெற்றியை ஊரே கொண்டாட வேண்டிய நேரத்தில், தந்தையின் இழப்பு வெற்றிக் கொண்டாட்டத்தை தவிர்க்க வைத்துள்ளது.

மெடல் வாங்கிட்டேன், தந்தையை இழந்துட்டேன்.. தமிழக வீராங்கனைக்கு நேர்ந்த துயரம்#CommonwealthGames | #Weightlifting | #Logapriya pic.twitter.com/5Q2FjB5peV
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 1, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.